பட்ஜெட் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் : மனோ, திகா, ராதா, ஜீவன் ஆதரவு - News View

About Us

About Us

Breaking

Friday, November 14, 2025

பட்ஜெட் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் : மனோ, திகா, ராதா, ஜீவன் ஆதரவு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவு செலவுத் திட்டம்/ பட்ஜெட்) இரண்டாவது மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (14) பாராளுமன்றத்தில் பி.ப. 6.20 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 8 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர்.

அந்த வகையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிய பாராளுமன்ற உறுப்பினர்களான, தமிழ் முற்போக்கு முன்னணி கட்சி தலைவர் மனோ கணேசன், பி. திகாம்பரம், வீ. இராதா கிருஷ்ணன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு) எம்.பிக்களான, சிவஞானம் ஶ்ரீதரன், ராசமாணிக்கம் சாணக்கியன், கவீந்திரன் கோடீஸ்வரன், ஞானமுத்து சிறிநேஷன், சண்முகம் குகதாசன், துரைராசா ரவிகரன், இளையதம்பி சிறிநாத், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்திருந்தனர்.

2026 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவுசெலவுத்திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நவம்பர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் இன்று (14) வரை, 06 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது.

இதேவேளை, குழு நிலை விவாதம் நாளை (15) முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 17 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment