தேசிய சொத்துக்களை விற்பனை செய்கின்ற சதி நடவடிக்கைகளின் ஓரங்கமாகவே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது - கபீர் ஹாசீம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

தேசிய சொத்துக்களை விற்பனை செய்கின்ற சதி நடவடிக்கைகளின் ஓரங்கமாகவே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது - கபீர் ஹாசீம்

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்கின்ற சதி நடவடிக்கைகளின் ஓரங்கமாகவே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. ஏனெனில் எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் மூடப்பட்டது. எனவே அங்கு பணியாற்றும் சுமார் 1,300 ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து, நாட்டின் தேசிய வளங்களையும் அவற்றைக் கையாளுகின்ற உரிமையையும் வெளிநாடுகளுக்கு வழங்குகின்ற இந்த மிகமோசமான செயற்பாட்டிற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இன்றளவில் எமது நாட்டில் சீனி, பால்மா, சமையல் எரிவாயு, பெற்றோல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாததன் விளைவாக நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருக்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆனால் நைஜீரியாவிலுள்ள நிர்மாணத்துறைசார் நிறுவனமொன்றிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருந்தன. வழமையாக எமது நாட்டிற்கு மசகு எண்ணெயை விநியோகிக்கின்ற முன்னணி நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு நைஜீரியாவிலுள்ள ஒரு நிறுவனத்திடம் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்குத் தற்போதைய அரசாங்கம் முற்பட்டிருந்த நிலையில், அந்நிறுவனத்தினால் மூன்று தடவைகள் உரிய நேரத்திற்கு மசகு எண்ணெய் விநியோகிக்கப்படவில்லை.

அதனையடுத்து அந்நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டிருந்த ஒப்பந்தத்தையும் இரத்துச் செய்யும் நிலையேற்பட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் விளைவாக நாட்டின் எரிபொருள் நிரம்பல் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் வலுசக்தி அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும்.

அதுமாத்திரமன்றி தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் சதிநடவடிக்கையின் ஓரங்கமாகவே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையை நோக்க வேண்டியுள்ளது.

ஏனெனில் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புபட்டதாகப் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதுடன் மாத்திரமன்றி அமைச்சரின் கூற்றுக்களில் தர்க்க ரீதியிலான நியாயங்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுமாத்திரமன்றி இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதோர் சதி என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக மசகு எண்ணெய் இறக்குமதி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆகியவற்றை முன்னெடுக்கின்ற அதிகாரத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அப்பால் எந்தவொரு நிறுவனத்திற்கும் வழங்கக்கூடியவகையில் 1970 ஆம் ஆண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனை கடந்த வருடம் உரிய துறைக்குப் பொறுப்பான அமைச்சரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஓமான், துபாய் போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்ததுடன் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கான முதலீடுகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார். அதன் பின்னர்தான் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.

மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தேவையான போதியளவு டொலர் இல்லை என்று சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமைக்குக் காரணம் கூறப்பட்டது. அதேவேளை மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதை விடவும் நேரடியாகப் பெற்றோலை இறக்குமதி செய்வது இலாபகரமானது என்று ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் பெற்றோலியக் கூட்டுத்தானத்தின் பொறியியலாளர்களால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையின்படி தற்போதைய சூழ்நிலையில் பெற்றோலை நேரடியாக இறக்குமதி செய்வதிலும்பார்க்க மசகு எண்ணெயை இறக்குமதிசெய்து, அதனை எமது நாட்டில் சுத்திகரித்து எரிபொருளைப் பெறுவது 10 சதவீதம் இலாபகரமானது என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.

சுத்திகரிப்புச் செயன்முறைகளில் காணப்படும் குறைபாடுகளுக்கு மத்தியிலும், அது 10 சதவீதம் வரையில் இலாபகரமான முறையாக இருக்குமேயானால் அதில் காணப்படும் குறைபாடுகளை சீர்செய்ததன் பின்னர் அதனை 20 - 30 சதவீதமான அதிகரிக்க முடியும்.

உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிட்டு, எண்ணெய் சுத்திகரிப்பு உரித்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான சதித்திட்டம் திரைமறைவில் அரங்கேறுகின்றதா? என்ற வலுவான சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

ஆகவே சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் சுமார் 1,300 ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து, நாட்டின் தேசிய வளங்களையும் அவற்றைக் கையாளுகின்ற உரிமையையும் வெளிநாடுகளுக்கு வழங்குகின்ற இந்த மிகமோசமான செயற்பாட்டிற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment