புதிய சட்டத்தை உருவாக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

புதிய சட்டத்தை உருவாக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் தினேஷ்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதுள்ள சட்டத்திற்கிணங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது. அதனால் புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின்போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் பயப்படுகின்றது. மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 2 வருடமாகியும் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் எம்மை குறைகூறி வருகின்றது. மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சபைக்கு சமர்ப்பித்தால் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அத்துடன் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் 2 வருடங்களுக்கு பிற்போட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளித்து தெரிவிக்கையில், நடைமுறை சட்டத்திற்கிணங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாகாண சபை தேர்தலை நடத்த புதிய சட்டம் இயற்றுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எமது முன்னாள் ஜனாதிபதியும் அது தொடர்பில் நீதிமன்றம் சென்றிருந்தார். அந்த வகையில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு நாங்கள் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

அதற்கிணங்க புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். உங்களது காலத்தில் நீங்கள் செய்த தவறை நாங்கள் நிவர்த்தி செய்வோம் என்றார்

No comments:

Post a Comment