சரத் பொன்சேகா, கமல் குணரத்தன ஆகியோர் பிரபாகரனின் ஒழுக்கத்தை புகழ்ந்துள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தா போதைப் பொருள் கடத்தல்காரர் எனக் கூறுவது வேடிக்கையானது - செல்வராசா கஜேந்திரன் - News View

Breaking

Wednesday, November 24, 2021

சரத் பொன்சேகா, கமல் குணரத்தன ஆகியோர் பிரபாகரனின் ஒழுக்கத்தை புகழ்ந்துள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தா போதைப் பொருள் கடத்தல்காரர் எனக் கூறுவது வேடிக்கையானது - செல்வராசா கஜேந்திரன்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்தத்தை களத்தில் இருந்து தலைமை தாங்கி நடத்திய இரண்டு தளபதிகளாக சரத் பொன்சேகா மற்றும் கமல் குணரத்தன ஆகியோரே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒழுக்கத்தை புகழ்ந்துள்ள நிலையில், அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா பிரபாகரனை போதைப் பொருள் கடத்தல்காரர் எனக் கூறுவது வேடிக்கையானது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழர்களை பொறுத்த வரையில் இந்த மாதம் மிகவும் முக்கியமான, புனிதமான மாதமாகும். சுதந்திர காலம் தொடக்கம் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளுக்கு எதிராக அதனை தடுத்து நிறுத்துவதற்காக போராடி தமிழ் மக்களின் தேசம் அதன் இறைமை மற்றும் அங்கீகரிக்கும் அடிப்படையில் தீர்வை எட்ட வேண்டும் என்றும், அதன்படி இந்தத் தீவின் அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நிலையை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ் மக்களுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் மாதமாக இந்த மாதம் இருக்கின்றது.

இந்த அவையில் மாவீரர்களுக்காக தலைசாய்த்து வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழர் தாயகமெங்கும் அந்த நினைவேந்தல் நிகழ்வு கடந்த இரண்டு தசாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் தமது காவல்துறை மற்றும் நீதித்துறையை பயன்படுத்தி அதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

காவல் துறையினரால் தவறாக நீதிமன்றங்களை வழிநடத்துவதும், தவறுகள் என்று தெரிந்தும் அரசாங்கத்தின் நெருக்குதல்களால் அதற்கு தடை விதிக்கின்றது. நினைவேந்தல் என்பது அடிப்படை உரிமையாகும். கடந்த 70 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த எங்கள் மக்கள் மீதும், தேசத்தின் மீதும் எந்தளவுக்கு அடக்குமுறைகளை கையாண்டுள்ளனர்.

நேற்றைய தினம் வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளுக்காக சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இராணுவத்தினர் அவ்வாறு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். இந்த சபையில் இப்போது ஜனாதிபதியின் அண்ணனின் மகன் நாமல் ராஜபக்‌ஷ சபையில் இருக்கின்றார். அவரூடாக ஜனாதிபதிக்கு ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதாவது, எங்களது தேசத்தையும், தேசத்தின் இறைமையையும் அங்கீகரிக்கின்ற பாதையில் முடிவுகளை எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். மாறாக கடந்த காலங்களில் எங்கள் மீது மேற்கொண்ட இனப் படுகொலையை மூடி மறைக்கும் வகையில், மாவீரர்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கின்ற வகையில், உங்களுடைய அனுகுமுறைகளை தொடர்ந்தும் கையாளாதீர்கள். இந்த அனுகுமுறைகளை மாற்றினால் இந்தத் தீவில் நிரந்தர அமைதியை பேணி, இந்தத் தேசத்தை ஐக்கியமாக கட்டியெழுப்பக் கூடிய சூழலையும் உருவாக்க முடியும்.

இதேவேளை இந்த அவையில் நேற்று, (நேற்றுமுன்தினம்) சிறீதரன் உரையாற்றும் போது, வடக்கில் போதைப் பொருள் பாவனை தொடர்பில் கூறும் போது, அந்த உண்மையை சகித்துக் கொள்ள முடியாத, துணை இராணுவக் குழுவின் தலைவரும், இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா பொய்யான கருத்தை முன்வைத்துள்ளார்.

அதாவது எங்களது தேசத்திற்காக 30 ஆண்டுகள் போராடியிருந்த எங்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் காலத்தில் போதைப் பொருள் வியாபாரம் நடந்ததாக அப்பட்டமான பொய்யை அவர் அங்கே கூறியுள்ளார். அந்தக் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன், முற்றாக மறுக்கின்றேன்.

யுத்தத்தை களத்தில் தலைமைதாங்கி நடத்திய இரண்டு தளபதிகளாக சரத் பொன்சேகா மற்றும் கமல் குணரட்ன ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் தலைவருடைய ஒழுக்கம் தொடர்பில் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

அதில் கமல் குணரட்ன, தாம் பிரபாகரனுடன் தொடர்புடைய பத்தாயிரம் புகைப்படங்களை பரிசோதனை செய்ததாகவும், அதில் எந்தவொரு இடத்திலும் ஒழுக்கக் கேடுகளையும் அவதானிக்கவில்லை என்றும் கருத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் உங்களுக்கு அடிமையாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவை அதனை வாசிக்குமாறு கூறுங்கள் என்றார்.

No comments:

Post a Comment