இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிராக தடை விதியுங்கள் - வலியுறுத்தியுள்ள பிரிட்டன் எம்பிக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிராக தடை விதியுங்கள் - வலியுறுத்தியுள்ள பிரிட்டன் எம்பிக்கள்

(நா.தனுஜா)

மனித உரிமை மீறல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் எனவே அமெரிக்காவைப்போன்று இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடையை விதிக்குமாறும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போர்க் குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக 'மெக்னிற்ஸ்கி' முறையிலான தடையை விதிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்களான எலியற் கொல்பேர்ன் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகிய இருவரும் பிரிட்டனின் வெளிவிவகாரச் செயலாளரிடம் கோரியுள்ளனர்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிற்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடை விதிக்க முடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்க முடியும்.

இந்நிலையில் குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத்தின் 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா மீதான நம்பத்தகுந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களின் விளைவாக அவருக்கு எதிராக அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளது. எனவே இவ்விடயத்தில் அமெரிக்காவைப் பின்பற்றிச் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று அவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனும் அதனைப் பின்பற்றிச் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும். அதன் மூலம் நாம் மனித உரிமை மீறல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிக்காட்ட வேண்டும்' என்று தெரேஸா வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் வழங்க வேண்டும். பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன. இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று சாரா ஜோன்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment