நாம் எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் : தனியார் நிறுவனங்களுக்கே வாய்ப்பை கொடுத்துள்ளோம் - மஹிந்தானந்த அளுத்கமகே - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

நாம் எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் : தனியார் நிறுவனங்களுக்கே வாய்ப்பை கொடுத்துள்ளோம் - மஹிந்தானந்த அளுத்கமகே

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இரசாயன உரத்தை நிறுத்தி சேதன பசளை திட்டத்தில் முன்னெடுக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தாலும் அரசாங்கமாக நாம் எடுத்த தீர்மானத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் கூறினார். 2024 ஆம் ஆண்டில் இருந்து ஏற்றுமதி விவசாயத்தை பலப்படுத்துவோம் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2,500 வருட நீண்ட வரலாற்றை கொண்ட எமது விவசாயத்துறைக்கு கொள்கைத் திட்டமொன்று இருக்கவில்லை. அதனையே நாம் உருவாக்கியுள்ளோம். நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கு ஒன்பது கொள்கையில் இயங்கிய விவசாயத்துறையை ஒரு தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளோம்.

அதேபோல் விவசாய துறைசார் தரவு சேகரிப்பு செயற்திட்டமொன்றை உருவாக்கியுள்ளோம். அதுமட்டுமல்ல, அடுத்த பெரும்போகத்தில் இருந்து மண் ஆய்வின் பின்னரே உரம் வழங்கப்படும் என்ற திட்டத்தையும் வகுத்துள்ளோம். அதற்கான ஆய்வு இயந்திரங்கள் சகல மாவட்டங்களுக்கும் வழங்கப்படும். இவை அனைத்துமே இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எடுத்த வேலைத்திட்டமாகும்.

சகல விதிகளையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைமையை மாற்றி இலங்கைகு என்ற உற்பத்தியை உருவாக்கி வருகின்றோம்.

2024 ஆம் ஆண்டில் இருந்து ஏற்றுமதி விவசாயத்தை பலப்படுத்துவோம். இறக்குமதியை நம்பி கப்பல் வரும் வரையில் வேடிக்கை பார்க்கும் கொள்கையில் இருந்து விடுபட்டு உள்நாட்டு உற்பத்தியின் பக்கம் பயணிக்க ஆரம்பித்துவிட்டோம்.

சேதன பசளை மூலமாக நாடு நாசமாகியுள்ளது என பாராளுமறத்தில் வாதாடும் ஒரே நாடு எமது நாடாகும். ஜனாதிபதியின் கொள்கைத்திட்டம் தவறென விமர்சித்து, சேதன பசளை திட்டத்துடன் எவருமே நிற்கவில்லை.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சூழல் நலன்சார் ஆர்வலர்கள் முதற்கொண்டு இதற்கு எதிராக உள்ளனர். எமக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தாலும் அரசாங்கமாக நாம் எடுத்த திட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

எனினும் மக்களின் கோரிக்கைக்கு அமைய இரசாயன உரம் இறக்குமதி செய்யப்படும், ஆனால் அதனை அரச நிறுவனகள் முன்னெடுக்காது, தனியார் நிறுவனங்களுக்கு அதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளோம்.

மரக்கறி விலை அதிகரிப்பிற்கு காலநிலையே காரணம். மாறாக உர பிரச்சினை அல்ல. இப்போது உர இறக்குமதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரினால் வெளியிடப்படும், அதற்கான நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படும்.

அதேபோல் குறுகிய காலத்தில் நாம் எடுத்துள்ள வேலைத்திட்டத்தில் பல தவறுகள் குறைபாடுகள் ஏற்பட்டன. ஆனால் திட்டம் மற்றும் கொள்கை மிகச்சிறந்த ஒன்றாகும். இதனை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து மக்களுக்கு விஷம் இல்லாத உணவுகளை பெற்றுக்கொடுப்போம். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பை தாருங்கள் என்றார்.

No comments:

Post a Comment