சிறந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு இன முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் அது வெற்றி பெறவில்லை : டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

சிறந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு இன முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் அது வெற்றி பெறவில்லை : டிலான் பெரேரா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து 2015 ஆம் ஆண்டில் உருவாக்கிய அரசாங்கத்தில் சிறந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு இன முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது வெற்றி பெறவில்லை என சபையில் தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா, இலங்கையர் என்ற உணர்வுடன் அனைவரும் சிந்திக்காத வரையில் நாடாக முன்னேற முடியாது என்றார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (22), வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மிகவும் கடினமான பாதையொன்றில் பயணிக்கும் போதே நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு இந்த வரவு செலவு திட்டத்தை முன்வைக்க நேர்ந்துள்ளது.

இதில் பொதுமக்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்காது, சுமைகள் தெரியாது அதேபோல் வரிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நபர்களை நெருக்கும் வரவு செலவு திட்டமாக கருத வேண்டும்.

இதுவரை காலமாக முன்னெடுத்த பொருளாதார கொள்கையே இன்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சகலரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களே.

இந்த அரசாங்கத்தில் நல்ல வேலைத்திட்டங்கள் எடுத்ததை போன்று தவறான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உரப் பிரச்சினை என்பன தவறான தீர்மானம், ஆனால் தடுப்பூசி பெற்றுக் கொடுத்த வேலைத்திட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும்.

தவறுகள் விடப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும். அதனை செய்ய முயற்சிக்கும் வேளையில் அதனையும் தடுப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

நாட்டில் பல்வேறு மாறுபட்ட ஆட்சியை உருவாக்கியும் அவற்றில் முழுமையாக வெற்றி கிடைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டில் பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து உருவாக்கிய அரசாங்கத்தில் நாட்டுக்கு ஏற்ற சிறந்த அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்த்தோம். இன முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது வெற்றி பெறவில்லை.

இந்த நாட்டில் நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், தொலைபேசி சின்னக்காரர்கள், காவியுடையினர் என சிந்திக்காது இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் சிந்திக்கும் வரையில் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது.

எனவே சகல தரப்பினரும் இப்போது ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அதனை கட்சி, மத, இன சார்பாக இல்லாது அனைவரும் சமமானவர்களாக சிந்திப்போம் என்றார்.

No comments:

Post a Comment