வடக்கு மீதான படையினரின் அக்கறையை யாழ். மக்கள் நன்கறிவர் : சிலர் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்களை திசை திருப்ப முயற்சி - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

வடக்கு மீதான படையினரின் அக்கறையை யாழ். மக்கள் நன்கறிவர் : சிலர் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்களை திசை திருப்ப முயற்சி - இராணுவத் தளபதி

(எம்.மனோசித்ரா)

வடக்கில் உள்ள சிலர் தங்களது தனிப்பட்ட நன்மைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்களை திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் யாழில் வாழும் தமிழ் சமூகம் மனிதாபிமான நடவடிக்கையின் போதும் தற்காலத்திலும் படையினரால் யாழ்ப்பாணத்தின் மீது காட்டப்படும் அக்கறையை நன்கறிவர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தேசிய மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் சென்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய இராணுவத் தளபதி, யாழ். குடாநாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள முப்படையினருக்கும் விசேட கடமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிந்து அமைதியான சூழலை உருவாக்கி தொடர்ந்தும் தங்களது சேவைகளை வழங்கியமைக்காக நன்றிகளை தெரிவித்தார்.

அதேபோல், வடக்கில் உள்ள சிலர் தங்களது தனிப்பட்ட நன்மைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்காக மக்களை திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் யாழில் வாழும் தமிழ் சமூகம் மனிதாபிமான நடவடிக்கையின் போதும் தற்காலத்திலும் படையினரால் யாழ்ப்பாணத்தின் மீது காட்டப்படும் அக்கறையை நன்கறிவர். அதற்கமைவான கண்ணியமான பணியை படையினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

'கொவிட்-19 தொற்றுநோய் பரவல் உக்கிரமடைந்து காணப்பட்ட காலப்பகுதியில் படையினர் விடுமுறைகளை பெற்றுக் கொள்ளாமல், சொந்த நலன்களை கருத்தில் கொள்ளாமல் தனிமைப்படுத்தல் மையங்களை பராமரித்தல், இடைநிலை பராமரிப்பு நிலையங்களை நிர்வகித்தல், கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட காலங்களை முகாமைத்துவம் செய்தல், வீதித் தடை பகுதிகளை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் படையினர் அர்பணிப்புடன் ஈடுபட்டனர் என்றும் தனித்துவமான முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்தி இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் செயன்முறை மற்றும் தேசிய தடுப்பூசியேற்றும் பணிகள் வெற்றிகரமாக அமைந்திருந்ததோடு, அதற்கான படையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம் மேற்படி சவாலான பணிகளுக்கு மத்தியிலும் படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுதல், போதைப் பொருள் கடத்தல் காரர்களை கைது செய்தல், சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல், வறிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்து கொடுத்தல், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர் திட்டங்களை நிறுவுதல் உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொணடதன் விளைவாக பிராந்தியத்தில் அமைதியை நிலவச் செய்தனர் என தெரிவித்த இராணுவ தளபதி அதற்காக படையினருக்கு நன்றிகளையும் கூறிக் கொண்டார்.

அதேநேரம் விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களும் யாழில் பெரும் சேவைகளை ஆற்றியிருந்தனர். புங்குடுதீவு துறைமுக பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவர்களது பணிகள் பன்மடங்காக அதிகரிக்கும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோரும் உரிய ஆதரவுகளை வழங்குவதால் படையினருக்கான சகல திட்டங்களும் சாத்தியமாகியுள்ளன எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment