அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்யும் முயற்சிக்கு எதிராக திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் : கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் பகுதிகளை இலக்கு வைத்து வர்த்தமானி : அரசாங்கம் தற்போது வேறொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது - ஹரீன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்யும் முயற்சிக்கு எதிராக திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் : கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் பகுதிகளை இலக்கு வைத்து வர்த்தமானி : அரசாங்கம் தற்போது வேறொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது - ஹரீன் பெர்னாண்டோ

(நா.தனுஜா)

அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்வதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக வத்தளை, கந்தானை, ஜா-எல, நீர்கொழும்பு உள்ளடங்கலாக அனைத்துத் தொகுதிகளில் இருந்தும் பெருமளவான மக்களைத்திரட்டி எதிர்வரும் திங்கட்கிழமை மிகப்பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை ஆசனத்தை நான் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு வத்தளையிலிருந்து மாத்திரமன்றி ஒட்டு மொத்த கம்பஹா மாவட்டத்திலிருந்தும் பெருமளவான வாழ்த்துக்கள் வந்து குவிந்தன.

அதற்கான காரணம் என்னவெனில், கம்பஹா மாவட்டத்திலிருந்து ஆளுந்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவராவார். அவர் நாட்டின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வந்ததன் பிற்பாடு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்திருப்பதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இம்முறை மக்களிடமிருந்துதான் எடுக்க வேண்டும் என்று அதற்குப் பதிலளிக்கின்றார். மக்களிடமிருந்து பறித்துக் கொள்வதற்கு இன்னமும் என்ன எஞ்சியிருக்கின்றது என்று எமக்குத் தெரியவில்லை.

அடுத்ததாக ஒட்டு மொத்த நாட்டிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் பேலியகொடையில் இருந்து கொச்சிக்கடை வரையான கரையோரப்பகுதிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாகக் கத்தோலிக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதிகள் இவ்வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக விற்பனை செய்யப்பட விருக்கின்றன. சில வேளைகளில் அவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டிருக்கக்கூடும். அவற்றை எமது ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் கையகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே இது குறித்து நானும் காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்களும் நாளையதினம் (இன்றைய தினம்) உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம்.

உண்மையைக் கூறுவதானால் அரசாங்கம் தற்போது வேறொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை ஆராய்வதற்கும் அது குறித்த சட்டவரைபைத் தயாரிப்பதற்குமென சர்ச்சைக்குரிய வகையில் புதிய செயலணியொன்று உருவாக்கப்படுகின்றது.

மறுபுறம் கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் பகுதிகளை இலக்கு வைக்கும் விதமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகின்றது. அருட்தந்தை சிறில் காமினியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றுக்கு எதிராக வத்தளை, நீர்கொழும்பு உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் பொதுமக்களை வீதிகளுக்கு இறக்கிப் போராட்டங்களை முன்னெடுப்போம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கேட்கக்கூடிய வகையில் போராட்டத்தை நடாத்துவதன் ஊடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை பாராளுமன்றத்தில் நானும் மனுஷ நாணயக்காரவும் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அருட்தந்தை சிறில் காமினி பேசியிருக்கின்றார். அதற்காக அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் குற்ற விசாரணைப் பிரிவிற்கு இல்லை.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துத் தொடர்பில் பேசிய மதத் தலைவர் ஒருவரைக் கைது செய்யும்படி கூறுமளவிற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சண்டியராக மாறியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அதற்கு எதிராக நாமனைவரும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம்.

அதன்படி வத்தளை, கந்தானை, ஜா-எல, நீர்கொழும்பு உள்ளடங்கலாக அனைத்துத் தொகுதிகளில் இருந்தும் பெருமளவான மக்களைத்திரட்டி எதிர்வரும் திங்கட்கிழமை மிகப்பாரிய போராட்டமொன்றை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு 'அல்லாஹ்' தான் காரணம் என்று கூறிய ஒருவரிடம் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை தொடர்பான செயலணியின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நீதியமைச்சர் எவ்வாறு வெட்கமின்றிச் செயற்படுகின்றார் என்ற கேள்வி எழுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தனியொரு குடும்பத்திடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.

அதுமாத்திரமன்றி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கின்றோம். அதில் எமது பலத்தைக் காண்பிக்கத் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment