'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பொதுமக்கள் நிலைப்பாட்டினைக் கோரும் செயற்திட்டம் ஆரம்பம் - News View

Breaking

Sunday, November 21, 2021

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பொதுமக்கள் நிலைப்பாட்டினைக் கோரும் செயற்திட்டம் ஆரம்பம்

(எம்.மனோசித்ரா)

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கான பொதுமக்கள் நிலைப்பாட்டினைக் கோரும் செயற்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் வவுனியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் - வலம்புரி கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சட்டத்தரணிகள், தொழிற்சங்கங் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மாணவர் மற்றும் சிவில் பிரஜைகள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இவ்வாறு கருத்து கோரப்பட்டது.

இந்நிகழ்வு நாளை திங்கட்கிழமை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும், எதிர்வரும் தினங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறவுள்ளது.

வவுனியா - போகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள வட மாகாண சேதன உணவு உற்பத்தியாளர் சங்கத்தின் அலுவலகத்திலும், வவுனியா மாவட்ட செயலகத்திலும் நேற்றையதினம் இந்த கருத்து கோரல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த பிரதேசங்களில் வசிக்கும் வெவ்வேறு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வருகை தந்திருந்தவர்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.

நீண்ட காலமாக தமது மனங்களில் இருந்த எண்ணங்களை இவ்வாறு செயலணிக்கு அறிவிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஒரே நாடு ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக செயலணியின் தலைவர் ஞானசார தேரர் இதன்போது தெரிவித்தார்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு தமது நிலைப்பாடுகளை தெரிவிக்க விரும்புபவர்கள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் செயலாளர், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி, தபால் பெட்டி இல.504 கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

அத்தோடு ocol.consultations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தமது நிலைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம்.

கேசரி

No comments:

Post a Comment