மக்கள் எதிர்கொண்டு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த தீர்வும் இல்லை : அனுரகுமார திஸாநாயக்க - News View

Breaking

Saturday, November 13, 2021

மக்கள் எதிர்கொண்டு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த தீர்வும் இல்லை : அனுரகுமார திஸாநாயக்க

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மக்கள் எதிர்கொண்டு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த தீர்வும் இல்லை. அத்துடன் விவசாயிகளின் விளைச்சலுக்கு ஏற்படும் பாதிப்புக்கு நட்டஈடு வழங்குவதாக தெரிவித்திருந்தபோதும் அதற்காக எந்த ஒதுக்கீடும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்கையில், மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்றாலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்ட யோசனைகளில் அதற்கான எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை.

ஜனவரியில் அரசாங்கத்தின் திட்டங்களை செயற்படுத்தப்பட்டாலும் நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த எடுக்க இருக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை.

அதேபோன்று சேதனப் பசளை ஊடாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அறுவடை குறைந்தால் அல்லது விளைச்சல் பாதிக்கப்பட்டால் அதற்கான நஷ்டஈடு வழங்குவதாக அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வந்தது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக எந்த ஒதுக்கீடும் முன்வைக்கப்படவில்லை.

அதுமாத்திரமல்லாது, இதன் பின்னர் குறை நிரப்பு பிரேரணை கொண்டுவரப் போவதில்லை என நிதி அமைச்சர் சபையில் தெரிவித்தார். அப்படியானால் அடுத்த வருடத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மூலமே விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். அது சாத்தியமில்லை.

அத்துடன் அரசாங்கத்தின் மொத்த செலவாக 5 இலட்சம் கோடி 20 இலட்சம் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கின்றது. அதேபோன்று அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2 இலட்சம் கோடி 20 ஆயிரம் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கின்றது. அப்படியானால் 3 இலட்சம் கோடி கடன் பெறும் வரவு செலவுத் திட்டமாகவே காண்கின்றோம்.

ஆனால் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக எந்த சோசனையும் இதில் இல்லை. இருக்கும் பொருளாதாரத்தை அவ்வாறே அடித்திச் செல்லும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment