டிங்கரிங் லசந்த கொல்லப்படலாம் என முன்கூட்டியே தகவல் கிடைத்தது : சட்டத்திற்கு புறம்பான கொலை அடையாளங்களை கொண்ட சம்பவத்தில் மீண்டும் பொலிஸ் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

டிங்கரிங் லசந்த கொல்லப்படலாம் என முன்கூட்டியே தகவல் கிடைத்தது : சட்டத்திற்கு புறம்பான கொலை அடையாளங்களை கொண்ட சம்பவத்தில் மீண்டும் பொலிஸ் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவதன் விளைவாக நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல்கள் காணப்படும் பின்னணியில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சட்டத்திற்கு புறம்பான கொலை அடையாளங்களை கொண்ட சம்பவத்தில் இலங்கை பொலிஸ் மீண்டும் ஈடுபட்டுள்ளது. அரசின் பாதுகாப்பில் இருக்கும் பொழுது சந்தேக நபர்களது உரிமைகளை பாதுகாப்பது குறித்து நாட்டின் உச்ச நீதிமன்றங்கள் முன்னதாக வழங்கிய தீர்ப்புக்களை கருத்திற் கொள்ளாது இருப்பதை பொலிஸார் தொடர்கின்றனர். பொலிஸ் பாதுகாப்பில் இருந்த நபரை பாதுகாக்க தான் தவறியமைக்கான விளக்கத்தை பொலிஸ்மா அதிபர் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சட்டதரணி சஞ்சய ஆரியதாச நேற்றுமுன்தினம் இரவு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தொடர்பு கொண்டு களுத்துறை பிராந்திய குற்றவிசாரணை பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட தனது சேவை பெறுநரான டிங்கரிங் லசந்த எனப்படும் எச்.எல். லசந்த என்பவரை தடுப்பு காவலில் இருக்கும் போதே ஆயுதங்களை அடையாளங்காட்ட அழைத்துச் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லும் திட்டத்தை பொலிஸார் வகுத்துள்ள தகவல்கள் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி உடனடியாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கததின் தலைவர் பொலிஸ்மா அதிபரிற்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் முறைமை ஊடாக இவ்விடயம் தொடர்பில் அறிவித்தார்.

அத்துடன் அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் மற்றும் புலனாய்வு விசாரணைகளுக்கு பொறுப்பான ஆணையாளரிற்கும் அப்பிரிவின் பணிப்பாளரிற்கும் இவ்விடயம் குறித்து அறிவித்துள்ளார்.

மேலதிகமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மனிதாபிமான முகவர் கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கும் அறிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வட மாகாண ஆளுநர் தியாகராஜா ஆகியோர் அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளதாகவும் இம்முறைப்பாடு குறித்து அறிவித்ததாகவும் சந்தேக நபரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களை தலையிடுமாறும் வேண்டிக் கொண்டதாகவும் உறுதிப்படுத்தினர்.

எவ்வாறாயினும் நேற்று காலை (26) அக்குறித்த சந்தேக நபர் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை மீட்க அழைத்துச் செல்லப்படும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மீண்டும் ஒருமுறை சட்டத்திற்கு புறம்பான கொலை அடையாளங்களை கொண்ட ஒரு சம்பவத்தில் இலங்கை பொலிஸ் ஈடுப்பட்டுள்ளது.

இக்கொலையானது நாட்டின் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவதன் விளைவாக நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் விளைவுகள் ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மாத்திரமன்றி இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நிறைவேற்றுத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்த பாதக செயலை தடுக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்ட பொழுதும் அவை யாவற்றையும் புறக்கணித்து இக்கொலை இடம் பெற்றுள்ளது.

அரசின் பாதுகாப்பில் இருக்கும் பொழுது சந்தேக நபர்களது உரிமைகளை பாதுகாப்பது குறித்து இந்நாட்டின் உச்ச நீதிமன்றங்கள் முன்னதாக வழங்கிய தீர்ப்புக்களை கருத்திற் கொள்ளாது இருப்பதை பொலிஸார் தொடர்கின்றனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களும் கூட முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதையும், குற்றவாளிகளை தண்டனைக்குட்படுத்த சட்டத்தின் முன்னர் கொண்டு வருவதற்கு அதிகாரிகளினால் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் நீதியின் நிர்வாகத்தின் மீது ஒட்டு மொத்த கேள்விகளை எழுப்புகிறது என்பதுடன் அதன் வினைத்திறன் மீதான பொதுமக்களது நம்பிக்கை இழப்பிற்கும் தாக்கம் செலுத்துகிறது.

இக்கொலைக்கான பொறுப்புடைமையானது அக்கொலையை புரிந்தவரை மாத்திரமன்றி அதனை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் மற்றும் சந்தேக நபரது பாதுகாப்பினை உறுதிப்படுத்த தவறியோர் எனஅனைவரையும் சேர வேண்டும்.

பொலிஸ் பாதுகாப்பில் இருந்த நபரை பாதுகாக்க தான் தவறிழத்தமைக்கான விளக்கத்தை பொலிஸ்மா அதிபர் அளிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்விடயம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் தனது கண்காணிப்பையும் தொடரும் என்பதுடன் அதனை பொது மக்களிற்கும் அறிவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment