இந்தியாவில் வேளாண் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதைப்போன்று இலங்கையிலும் இரசாயன உரம் தொடர்பான தீர்மானம் நீக்கப்பட வேண்டும் : உர இறக்குமதி கொடுக்கல், வாங்கலின் பின்னணியில் பாரிய நிதி மோசடி - பி.ஹரிஸன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

இந்தியாவில் வேளாண் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதைப்போன்று இலங்கையிலும் இரசாயன உரம் தொடர்பான தீர்மானம் நீக்கப்பட வேண்டும் : உர இறக்குமதி கொடுக்கல், வாங்கலின் பின்னணியில் பாரிய நிதி மோசடி - பி.ஹரிஸன்

(நா.தனுஜா)

இந்தியாவில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களின் விளைவாக அதனை இரத்துச் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதனைப்போன்று எமது நாட்டிலும் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களைக் கருத்திற்கொண்டு இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்யும் தீர்மானத்தை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்வதற்குத் தவறியிருக்கிறார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிஸன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தாவர ஊட்டச்சத்துப் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளரினால் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தகைய தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே அமைச்சின் செயலாளரால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சர் எதனையும் அறியவில்லையா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கத்தினால் சடுதியாக மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களின் விளைவாக நாடளாவிய ரீதியில் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளில் அரிசியை வழங்குவதாகக்கூறிய அரசாங்கம், அதனை உரியவாறு நடைமுறைப்படுத்தத் தவறியிருக்கின்றது. அதனால் மறுபுறம் நுகர்வோரும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி மரக்கறிகளின் விலைகளும் பெருமளவால் அதிகரித்துள்ளன. அதிக மழைவீழ்ச்சி காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மரக்கறிகளின் விலைகளில் குறித்தளவிலான அதிகரிப்பொன்று ஏற்படுவது வழமையாகும். ஆனால் இதற்கு முன்னரொருபோதுமில்லாத வகையிலான விலையுயர்வு இம்முறை ஏற்பட்டிருக்கின்றது.

இரசாயன உர இறக்குமதி நிறுத்தப்பட்டபோது விவசாயிகளுக்கு சேதன உரத்தை வழங்குவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அந்த வாக்குறுதியை உரியவாறு நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உரத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் விவசாயிகளாலும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளடங்கலாக பல்வேறு கட்சிகளாலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பெரும்போகப் பயிர்ச் செய்கைக்குரிய காலப்பகுதியில் முன்னெப்போதுமில்லாதவாறு இம்முறை அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவானது. அச்சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு அவசியமான உரம் வழங்கப்பட்டிருந்தால், பெருமளவான விளைச்சலைப் பெற்றுக் கொண்டிருக்கமுடியும் என்பதுடன் அரிசியின் விலை குறைவடைந்திருக்கும்.

ஆனால் சாதாரண விவசாயிகளின் நிலைமையும் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளாத அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இரசாயன உரத்தை இறக்குமதி செய்யமாட்டோம் என்று தொடர்ந்து கூறிவந்தது.

இந்தியாவில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட்டங்களை நடத்தினார்கள். அதன் விளைவாக வேளாண் சட்டங்களை இரத்துச் செய்வதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருக்கின்றார்.

அதேபோன்று எமது நாட்டிலும் சேதன உரத்திற்கு முழுமையாக மாறுகின்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பியபோதிலும் அதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. ஆகவே இரசாயன உர இறக்குமதியைத் தடை செய்யும் தீர்மானத்தை நீக்கிக் கொள்வதாக ஜனாதிபதி முன்வந்து கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை.

மாறாக முறையான தரநிர்ணயத்தைக் கொண்ட தாவர ஊட்டச்சத்துப் பதார்த்தங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளரினால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டதையடுத்து, விவசாயிகள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

இருப்பினும் அத்தகைய தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே அமைச்சிற்குள் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் அவர் எதனையும் அறியவில்லை என்பது தெளிவாகின்றது.

அடுத்ததாக இந்தியாவிலிருந்து தலா 12.50 டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட 500 மில்லி லீற்றர் நனோ நைட்ரஜன் உரத்தை 10 டொலருக்கு வழங்குவதாக அந்நிறுவனம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

அவ்வாறெனின், மேலதிகமாகவுள்ள 2.50 டொலர் வீதம் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த நனோ நைட்ரஜன் உரத்திற்கும் செலுத்தப்பட்ட பணம் யார் வசமுள்ளது? இந்த நனோ நைட்ரஜன் உர இறக்குமதி கொடுக்கல், வாங்கலின் பின்னணியில் பாரிய நிதிமோசடி இடம்பெற்றுள்ளது.

எனவே இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் அரசாங்கத்தை மாற்றி, மக்களின் நலனை முன்னிறுத்தி சேவையாற்றும் அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்குமாறு நாட்டுமக்களை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment