ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் - தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா - News View

Breaking

Tuesday, November 23, 2021

ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் - தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, ஹங்கேரி, நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது.

அமெரிக்கா அரசு தங்களது நாட்டு குடிமக்களுக்கு வெளி நாடுகளுக்கு பயணம் செல்வது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதில், கொரோனா பாதிப்பை நான்கு பிரிவுகளாக வகுத்துள்ளது.

அதில் 4 வது பிரிவு மிகவும் மோசமான கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளை குறிக்கும். இந்த 4 வது பிரிவில் தற்போது ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், கிரீஸ், நோர்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இரு நாடுகளும், மோசமான கொரோனா பாதிப்பை குறிக்கும் 4 வது பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்க ஐரோப்பிய நாடுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment