கொழும்புத் துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளடங்கலாக நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் (புதன்கிழமை) இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த தொழிசங்கங்களின் தலைவர்கள் கூட்டாக இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட துறைமுக ஐக்கிய சேவை சங்கத்தின் செயலாளர் டிலான் பெரேரா மேலும் கூறியதாவது, கொழும்புத் துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு சொந்தமான சி.ரி.சி.ஐ நிறுவனத்திற்கு 35 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கான யோசனை துறைமுக மற்றும் கப்பற்துறை அமைச்சரால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி தற்போது நூற்றுக்கு நூறு சதவீதம் துறைமுக அதிகார சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் சேவை வழங்கல் மத்திய நிலையமும் அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தினாலும் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினாலும் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சொத்துக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இருப்பினும் அதன் விளைவாக எமது நாட்டிற்கோ அல்லது துறைமுக அதிகாரசபைக்கோ எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையின் பிரகாரம் சேவை வழங்கல் மத்திய நிலையம் உள்ளடங்கலாக கொழும்புத் துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியை சீன நிறுவனத்திற்கு வழங்குவதன் விளைவாக வருடாந்தம் எமது நாட்டிற்கு 2.8 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெற்றுத்தரக் கூடிய கட்டமைப்பிடமிருந்து 35 வருட காலத்திற்கும் ஒட்டு மொத்தமாக 2.8 பில்லியன் ரூபா வருமானத்தை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். எனவே அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் எமது நாட்டிற்குச் சொந்தமான வளங்களை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்க முடியாத நிலையுருவாகும்.
எனவேதான் துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து 'தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு' என்ற பெயரில் கூட்டாகச் செயற்பட்டு வருகின்றோம்.
அதுமாத்திரமன்றி இலங்கை மின்சார சபை, பெற்றோலியக்கூட்டுத் தாபனம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம்.
நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யமாட்டோம் என்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட சொத்துக்களை மீளப் பெறுவோம் என்றும் கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது அதற்கு முற்றிலும் மாறாகவே செயற்பட்டு வருகின்றது.
எனவே அரசாங்கத்தின் அத்தகைய செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கு மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.
அதன்படி எதிர்வரும் காலங்களில் துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் வீதிகளில் இறங்கிப் போராடச் செய்து, அரசாங்கத்தின் முறைகேடான நடவடிக்கைகளைத் தோற்கடிப்போம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment