வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை : இன்றையதினம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம் - இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை : இன்றையதினம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம் - இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்த உடன்படிக்கையை இரத்து செய்யக்கோரி நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை கொழும்புக்கு கொண்டு வந்து இன்றையதினம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். இன்றையதினம் முதல் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் 'வீரகேசரி'க்குத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம், மட்டகளப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு இலங்கை மின்சார சபை தலைமை காரியாலய முன்பாக அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளோம்.

எமது இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், துறைமுக ஊழியர்களும், பெற்றோலிய ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். இதில் இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்கள் கொழும்பு கோட்டை கான் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னாலும், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், கொலன்னாவை, சப்புகஸ்கந்த ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

நாம் வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பது உறுதி. எனினும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஆரம்பத்தில் நாம் நவம்பர் 3 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்திருந்த போதிலும், நாட்டில் அசாதாரண கால நிலை நிலவுவதால் பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்க விரும்பவில்லை.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஜெனரேட்டர்கள் மூலமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ளவார்கள். எனினும், பொதுமக்களுக்கு அந்த வசதி இல்லை. ஆகவே, வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்ட தினத்தன்று, இலங்கை மின்சார சபையின் அவசர தேவைக்கான ஊழியர்கள் கடமையாற்றுவார்களே தவிர வேறு எவரும் கடமையாற்ற மாட்டார்கள். மின்சார கோளாறு ஏற்பட்டால், அவ்ர்கள் தங்களது கடமைகளை செய்வார்கள். எனினும், மரம் முறிந்து விழுவதால் ஏற்படும் மின் விநியோக கோளாறுகளை செய்ய மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment