கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத் தவறவில்லை - அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத் தவறவில்லை - அமைச்சர் ஜோன்ஸ்டன்

கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றத் தவறவில்லை என ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் 36.000 பேருக்கு அரசாங்கத்தினால் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்கள் என்ன செய்தது என கேட்போருக்கு எமது அரசாங்கம் ஊழல் மோசடியை ஒழித்து நாட்டில் சிறந்த ஆட்சியை நிலைநாட்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டையும் நாட்டின் பாதுகாப்பையும் இல்லாதொழித்து அரசியல் பழிவாங்கலையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்ட எதிர்கட்சியினர் தற்போது நாட்டை பொறுப்பேற்கத் தயார் என கூறி வருகின்றனர். அவர்களின் அரசியல் பழிவாங்கல் செயற்பாடே நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வழிவகுத்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வீதி அபிவிருத்தி திட்டங்களில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. ஊழல் மோசடிகள் மலிந்த காலமாக அதனைக் குறிப்பிட முடியும்.

எதிர்க்கட்சியில் சிலர் பட்டினி பற்றி சபையில் பேசுகின்றனர். நாட்டில் எவரும் பட்டினியை எதிர்கொள்வதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

வெறும் வார்த்தைக்கு மட்டும் மட்டுப்படுத்தாது சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை இம்முறை வரவு செலவுத் திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் 'மைத்திரி ஆட்சியில் நிலையான நாடு', '100 நாள் வேலைத்திட்டம்' என ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் எதையும் மேற்கொள்ள முடியாமல் போனது. 

அக்காலத்தில் மத்திய வங்கியின் பணத்தை செலவழித்தே தேர்தல் நடத்தினார்கள். கொள்கைகளும் வேலைத்திட்டங்களும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருந்தன. நாட்டுக்கோ மக்களுக்கோ எதுவும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment