(நா.தனுஜா)
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் அரசியல் பலத்தையும் ஆட்சியதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் இன மற்றும் மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையே அதன் பின்னர் ஏற்பட்ட இனக் கலவரங்களுக்கும் மூன்று தசாப்த காலப் போருக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக மீண்டும் அவ்வாறான நிலையொன்று உருவாவதற்கான பின்னணி தற்போது நாட்டில் எழுச்சி பெற்று வருகின்றது. அதனைத் தோற்கடித்து, பல்வேறு இன, மத சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மகா சங்கத் தேரர்கள் உள்ளடங்கலாக அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய அறைகூவல் விடுத்திருக்கின்றார்.
நாட்டிலுள்ள பல்வேறு இன, மதக் குழுக்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் 'இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான கூட்டிணைவு' என்ற கிளை அமைப்பு நிறுவப்பட்டிருப்பதுடன் அதனூடாக மகா சங்கத் தேரர்கள் உள்ளடங்கலாக அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் முதலாவது கூட்டம் இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இன, மத ஒருமைப்பாட்டையும் சுதந்திரத்தையும் கொண்ட ஜனநாயக நாடொன்றில் வாழ்வதையே அனைத்து மக்களும் விரும்புகின்றார்கள். அவ்வாறான நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை நாம் எமது அடுத்த சந்ததியினருக்கு வழங்குவது அவசியமாகும்.
சுதந்திரமடைவதற்கு முன்னர் மிகவும் சுபீட்சமான நாடாக விளங்கிய இலங்கை, சுதந்திரமடைந்ததன் பின்னர் மிக வேகமாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தோல்வியடைந்த இரு இராணுவ சதித்திட்டங்களுக்கும் இளைஞர்களின் போராட்டங்கள் இரண்டிற்கும் அவற்றால் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து மூன்று தசாப்த கால யுத்தத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
இன்றளவில் இலங்கை இன ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பிளவடைந்த நாடாகவே காணப்படுகின்றது. இவ்வாறான துரதிஷ்டவசமான சூழ்நிலையை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அனைத்து மதத் தலைவர்களிடமும் நாம் முன்வைக்கின்ற முதன்மைக் கோரிக்கையாக இருக்கின்றது.
எமது இனமும் மதமும் பெற்றோரும், நாம் பிறக்கின்ற இடமும் நாமாகக் கேட்டுப் பெறுகின்ற விடயங்களல்ல. மாறாக அவை தானாவே நிர்ணயிக்கப்பட்ட விடயங்களாகும். பௌத்த தர்மத்தின்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பௌத்தர்களாகிய நாம் எப்போதும் இனவாதிகளாக செயற்படக்கூடாது.
இந்நாட்டில் இனவாத அடிப்படையிலான சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கான தெளிவூட்டல்களை மகா சங்கத்தேரர்கள் வழங்க வேண்டும்.
இன அடிப்படையில் பிளவுகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தி, நாட்டை முழுமையாக சீர்குலைக்க வேண்டியதன் அவசியம் என்ன? எமது நாட்டைப் பொறுத்த வரையில் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் ஏற்பட்ட பாரிய பின்னடைவுகளும் மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி கண்டமையும் இன, மத ரீதியில் ஏற்பட்ட பிளவுகளும் நாட்டின் அடுத்த கட்ட நகர்வுகளில் குறிப்பிடத்தக்களவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.
அவை பிற்காலத்தில் நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் தோற்றம் பெறக் காரணமாக அமைந்ததுடன் மூன்று தசாப்த காலப் போரின் அடிப்படையாகவும் அவை அமைந்தன. அதன் விளைவாக பெரும் எண்ணிக்கையிலான உயிர்கள் பலியானதுடன் நாட்டின் சொத்துக்களும் சேதமடைந்தன.
பிரபல ஆய்வாளர்கள் இத்தகைய மிகப்பாரிய பேரழிவு ஏற்படுவதற்கான காரணங்களாகக் குறிப்பிடுவனவற்றில், சுதந்திர இலங்கையில் மக்களை முன்னிறுத்திய அரசைக் கட்டியெழுப்புவது குறித்து சமுதாயத்தின் மத்தியில் விரிவானதும் ஆழமானதுமான தர்க்கங்கள் காணப்படாமை மற்றும் அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடனான பொதுக் கொள்கையொன்றை எட்டத்தவறியமை என்பன பிரதானமானவையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
அதுமாத்திரமன்றி நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் அரசியல் பலத்தையும் ஆட்சியதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பல்வேறு இன, மத சமூகங்களுக்கு இடையில் திட்டமிட்டுப் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் சில தரப்புக்கள் செயற்பட்டமையும் அதற்கான காரணங்களில் முக்கியமானதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக மீண்டும் அத்தகைய நிலையொன்று உருவாவதற்கான பல்வேறு காரணிகள் நாட்டில் இப்போது எழுச்சி பெற்று வருகின்றன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னரான நிலைவரங்கள் தொடர்பில் நோக்குகையில், நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்களின் மனங்களில் பல்வேறு சந்தேகங்களும் அச்சமும் உதயமாகியிருப்பதுடன் அவ்வப்போது பாரிய எதிர்ப்பலைகள் எழுச்சி பெறுவதற்கும் அவை காரணமாக அமைந்துள்ளன. இந்தப் போக்கு நாட்டின் எதிர்கால நகர்வுகளிலும் நிலைபேறானதன்மையிலும் குறிப்பிடத்தக்களவிலான தாக்கங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
ஆகவே பொறுப்பு வாய்ந்த சிவில் சமூக அமைப்பு என்ற வகையிலும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையிலும் இது குறித்து விசேட அவதானம் செலுத்துவதுடன் அதன் விளைவாக நாட்டில் எவ்வித அசாம்பாவிதங்களும் ஏற்படாதிருப்பதனை உறுதி செய்வதற்கான தலையீட்டினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான கூட்டிணைவு என்ற ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த விசேட மாநாட்டின் ஊடாக, இந்நாட்டிலுள்ள மிகவும் முக்கியமான 'அழுத்தக் குழுக்களாகக்' கருதப்படும் மத அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்களை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அதுமாத்திரமன்றி இன மற்றும் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எமது முக்கிய குறிக்கோளாகக் காணப்படுகின்றது.
எனவே இன, மத ரீதியான நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment