ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். உடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்களே : புலனாய் அதிகாரிகள் யாரும் சஹ்ரானை சந்தித்ததாக ஹாதியா எந்தவொரு இடத்திலும் வாக்கு மூலம் வழங்கவில்லை : ஹரின் பெர்னாண்டோ பொய்த் தகவல்களை தெரிவித்து விசாரணைகளை குழப்பக்கூடாது - சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Thursday, November 11, 2021

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். உடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்களே : புலனாய் அதிகாரிகள் யாரும் சஹ்ரானை சந்தித்ததாக ஹாதியா எந்தவொரு இடத்திலும் வாக்கு மூலம் வழங்கவில்லை : ஹரின் பெர்னாண்டோ பொய்த் தகவல்களை தெரிவித்து விசாரணைகளை குழப்பக்கூடாது - சரத் வீரசேகர

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் இருந்து சிறியாவுக்கு சென்று ஐஎஸ் அமைப்புடன் இணைந்து கொண்டவர்களே ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பது எமது புலனாய்வு விசாரணையில் தெரியவந்திருக்கின்றது. அதனடிப்படடையில் விசாரணை மேற்கொண்டே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டடு 200 க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதனால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாணை அறிக்கையை முழுமையாக சபைக்கு சமர்ப்பிக்க முடியாது.

அத்துடன் புலனாய் அதிகாரிகள் யாரும் சஹ்ரானுடன் அவரது வீட்டில் சந்தித்ததாக சஹ்ரானின் மனைவி ஹாதியா எந்தவொரு இடத்திலும் வாக்குமூலம் வழங்கியதில்லை. அவ்வாறு தெரிவித்திருந்திருந்தால் ஹரின் பெர்னாண்டோ அதனை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரசத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அமைச்சரவை அறிவிப்பை வெளியிட்டு தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தாெடர்பாக சஹ்ரானின் மனைவி 5 வாக்கு மூலங்களை வழங்கி இருக்கி்ன்றார். அதில் 2 வாக்கு மூலங்கள் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரும் 3 வாக்கு மூலங்கள் தாக்குதலுக்கு பின்னரும் வழங்கப்பட்டவையாகும். 2019 மே மாதம் 6 ஆம் திகதி ஹாதியா அம்பாறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்கி இருக்கின்றார். அதில் எந்த இடத்திலும் புலனாய்வு அதிகாரிகள் யாரும் சஹ்ரானை அவரது வீட்டில் சந்தித்ததாக தெரிவிக்கப்படவில்லை.

அதேபோன்று 2019 மே 17 குற்றப் புலனாய்வு பிரிவிலி வாக்கு மூலம் வழங்கி இருந்தார். அதிலும் புலனாய்வு அதிகாரிகள் சஹ்ரானை அவரது வீட்டில் சந்தித்ததாக எங்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வந்தால், அவர் கூறியது பொய் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். நாங்கள் அவரை கைது செய்ய அழைக்கவில்லை.

மேலும் ஜனாதிபதி ஆணைக்குழு ஹாதியாவை விசாரணை செய்தது. அது தொடர்பில் 362 பக்கங்கள் இருக்கின்றன. அதிலும் புலனாய்வு அதிகாரிகள் சஹ்ரானை சந்தித்ததாக எங்கும் பதிவாக வில்லை. அதனால் ஹரின் பெர்ணான்டோவுக்கு முடியுமானால் இந்த விடயத்தை பாராளுமன்றத்துக்கு வெளியில் தெரிவிக்கவும். அப்போது இந்த 362 பக்கங்களையும் அவருக்கு வழங்குவேன். அப்போது அவர் தெரிவித்தது பொய் என்பதை உறுதிப்படுத்தி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குழுவொன்றுடன் சென்று கொள்ளுப்பிடி ஆலயத்துக்கு சென்று மஹஜர் ஒன்றை கையளித்திருக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுதான், சஹ்ரான் உட்பட தெளஹீத் ஜமாஅத் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதற்கு பின்னரும் புலனாய்வு துறையினருடன் நேரடி தொடர்பு இருந்ததாகவும் அவர்களை போஷித்து சம்பளம் வழங்கி இருந்ததாகவும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் விசாணை மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றது. அதில், புலனாய்வு அதிகாரிகளுக்கும் சஹ்ரானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகி இருக்கின்றது.

அதேபோன்று ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் 2 முறை ஹாதியாவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை செய்திருக்கின்றது. அதில் கட்டுபாப்பிட்டிய ஆலயத்தில் குண்டு வெடிக்கச் செய்த ஹஸ்தூனின் மனைவி பெராேஸா மற்றும் மட்டக்களப்பு சியோன் ஆலயத்தில் குண்டு வெடிக்கச் செய்தவரின் மனைவி சாரா ஆகிய இருவரும் தனது வீட்டில் இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

இந்த வாக்கு மூலங்களை பெற்றுக் கொண்ட சானி அபேசேகர, இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்காமல் இருந்தார். இதனை முன்னெடுத்திருந்தால், ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருந்திருக்கலாம்.

மேலும் கலனிகம அதிகேவகப் பாதையின் நுழைவாயிலில் 2019 ஏப்ரல் 4ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் இரண்டு லொறிகள் கைது செய்யப்பட்டிருந்தன. அந்த லாெறிகளை பரிசோதித்து பார்த்தபோது, அதில் சீனாவில் இருந்துகொண்டுவரப்பட்ட வளப்பு மீன்கள் இருந்தன.

ஒட்சிசன் உதவியுடன் இந்த மீன்கள் இருந்ததால் நீண்ட நேரம் வைத்துக் கொண்டிருந்தால் அவை இறந்து விடும் என உரிமையாளர் தெரிவித்திருந்தார். அதிக விலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், சோதனை நடவடிக்கை முடிந்ததுடன் அந்த லொறியை விடுவிக்குமாறு பிரதான பொலிஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற தினம் மாலு மாலு என்ற ஹோட்டலில் பொலிஸ் அதிகாரி எவரும் தங்கியதில்லை. அவ்வாறு தங்கி இருந்தால் அதனை உறுதிப்படுத்தும் பற்றுச்சீட்டு இருக்குமாக இருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயள்படுத்திக் கொண்டு பொய் தகவல்களை தெரிவித்து, ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை குழப்பக்கூடாது.

தற்போது இந்த விசாரணை முறையாக இடம்பெற்றுக்கொண்டு செல்வதை தடுப்பதற்கே இவ்வாறான பொய் கதைகளை தெரிவித்து அதனை குழப்ப முயற்சிக்கின்றனர்.

அத்துடன் 2016/17 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிறியாவுக்கு சென்று ஐஎஸ் அமைப்புடன் இணைந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பாக விஜேதாச ராஜபக்ஷ் கடந்த அரசாங்கத்தில் இருந்து பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டிருப்பவர்கள் அந்த முஸ்லிம் இளைஞர்கள் என்பது உறுதியாக இருக்கின்றது.

அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 200 க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

ஏனையவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதனால் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை அறிக்கையை பாராளுமள்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment