மெல்கம் ரஞ்சித் கர்தினாலின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது : குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுப்போம் - அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Wednesday, November 3, 2021

மெல்கம் ரஞ்சித் கர்தினாலின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது : குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுப்போம் - அமைச்சர் சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் நிறைவு பெற்று வெகுவிரைவில் வழக்கு தாக்கல் செய்ய முடிந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது. குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரித்தார்.

மாலபே பகுதியில் புதிய பொலிஸ் நிலையத்தை நேற்றைய தினம் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டனை தொடர்ந்து வலியுறுத்துகிறார். அவரது கருத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

ஏனெனில் அவர் நாட்டில் வாழும் கத்தோலிக்க சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் உலக வர்த்தக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான ஷேக் மொஹமட் என்பவருக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கு பிறகே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு பிரான்சில் தாக்குதல் இடம் பெற்றது. 7 ஆண்டு களுக்கு பிறகுதான் அத்தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்கதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து பொலிஸ் தரப்பில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும் ஏனைய தரப்பினர் ஊடாக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 பேருக்கு 5 மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு விசாரிக்கப்படுகிறது. அதேபோல் பிரதான தரப்பினரான நௌபர் மௌலவி, ஜபூர் மாமா, உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகள் மூவரை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் விசாரணை நடவடிக்கைகளை நிறைவு செய்து வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. குற்றப் புலனாய்வு திணைக்களம் 112000 தொலைபபேசி அழைப்புக்களை பரிசீலனை செய்துள்ளது. அதேபோல் 23700 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான்கு பிரதான அறிக்கைகள் காணப்படுகின்றன. பாராளுமன்ற தெரிவுக் குழு, பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை தெரிவுக் குழு, ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வு விசாரணைகள் ஆகியவற்றின் அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment