ஞானசார தேரர் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் : தமிழ், முஸ்லிம்களின் மதம் பாரம்பரிய கலாச்சாரங்களை ஒரே நாடு ஒரே சட்ட கட்டமைப்பிற்குள் உள்வாங்க முடியாது - சரத் பொன்சேகா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

ஞானசார தேரர் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் : தமிழ், முஸ்லிம்களின் மதம் பாரம்பரிய கலாச்சாரங்களை ஒரே நாடு ஒரே சட்ட கட்டமைப்பிற்குள் உள்வாங்க முடியாது - சரத் பொன்சேகா

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற எண்ணக்கரு சிறந்ததாக காணப்பட்டாலும் அதற்கு அவர் தெரிவு செய்த தரப்பினர் சிறந்தவர்களல்ல, ஞானசார தேரர் இனவாத கொள்கையுடையவர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் சமூகத்தினரது மதம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கட்டமைப்பிற்குள் உள்வாங்க முடியாது. ஆகவே மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு சட்ட வரைபை தயார்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த தரப்பினரை ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும். ஞானசார தேரர் தலைமைத்துவத்திலான செயலணியின் உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு தற்போது பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதை விடுத்து அரசாங்கம் போராட்டத்தை தீவிரப்படுத்தி விட்டது. ஆசியர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டுக் கொண்டு அவர்களின் கோரிக்கையை அரசியல் மயப்படுத்தியது.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முறையான திட்டங்களை முன்னெடுக்கவில்லை. தற்போது கொவிட்-19 நான்காம் அலை தோற்றம் பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. ஆகவே மக்கள் தங்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தை நம்பி பயனில்லை.

வயல் நிலங்களில் விவசாயத்தில் ஈடுபட வேண்டிய விவசாயிகள் தற்போது வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளார்கள். சேதன பசளை பயன்பாட்டினால் பெற்றுக் கொள்ளப்படும் விளைச்சல் தரமற்றதாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு மக்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

யுகதனவி விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்திற்கு துறைசார் நிபுணர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை பிற நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

யுகதனவி விவகாரத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சியின் உறுப்பினர்கள் நேர்மையுடன் செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை பெற்றுக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதால் எவ்விதத்திலும் மாற்றம் ஏற்படாது. ஆகவே பங்காளி கட்சி தலைவர்களின் செயற்பாடு நகைப்புக்குரியது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்தும் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக அமையும் என ஆரம்பத்தில் எதிர்பார்த்தோம் ஆனால் தற்போது அது முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான இந்த செயலணி தொடர்பில் பெரும் சர்ச்சை அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ளது.

ஞானசார தேரர் இனவாத கொள்கையுடையவர். நாட்டில் கடந்த காலங்களில் தோற்றம் பெற்ற இனக் கலவரங்கள், இன முரண்பாடுகளுக்கு இவர் பொறுப்புக்கூற வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்தும் கொள்கை சிறந்தது. அதற்காக அவர் தெரிவு செய்துள்ள தரப்பினர் குறித்து பாரிய சந்தேகம் காணப்படுகிறது. ஆகவே செயலணியின் உறுப்பினர் நியமனம் குறித்து ஜனாதிபதி மீளாய்வு செய்ய வேண்டும்.

நாட்டில் மூவின மக்களும் பல்வேறு சட்டங்களை பின்பற்றுகிறார்கள். இருப்பினும் நாட்டு மக்கள் அனைவரும் பொதுச்சட்டத்திற்கு கட்டுப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்வதால் யாருக்கு, என்ன முஸ்லிம் சமூகத்தினரது மத சார்ந்த சட்டங்கள் பிற தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மதம் மற்றும் கலாச்சாரங்கள் ரீதியிலான பாராம்பரிய கொள்கைகளை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கட்டமைப்பிற்குள் உள்வாங்க முடியாது.

தமிழ், முஸ்லிம் மக்களின் கலாச்சாரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஞானசாரர் தேரர் தலைமையிலான செயலணி செயற்படும் என்ற சந்தேகம் காணப்படுகிறது. படித்த மற்றும் அனைத்து இன மக்களின் நன்மதிப்பை பெற்றவர்களை ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்ட உரத்தை சீனா பலவந்தமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பது ஒழுக்கமற்ற செயற்பாடாகும். சீனர்கள் நாட்டை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சீனாவின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாட்டின் கடற்பரப்பில் உள்ள சீன கப்பலை அரசாங்கம் தற்துணிவுடன் வெளியேற்ற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment