தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்படுள்ளதால் ஈபிஎப் கிடைப்பதில்லை : நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Friday, November 12, 2021

தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்படுள்ளதால் ஈபிஎப் கிடைப்பதில்லை : நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ராதாகிருஷ்ணன்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தீர்மானம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் ஆயிரம் ரூபா கிடைப்பதில்லை. அத்துடன் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை காரணம் காட்டி இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதியும் கிடைப்பதில்லை என வே. ராதாகிரிஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தும் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தனியார் துறையினரின் ஓய்வு பெறும் வயதை 60 வரை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கும் இது நல்லவிடயமாக இருக்கின்றது. என்றாலும் அவர்கள் விரும்பினால் ஈபிஎப், ஈடிஎப் கொடுப்பனவை 50 வயதுக்கு பின்னர் பெற்றுக் கொள்ள முடியுமான வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. ஈபிஎப், ஈடிஎப் மாத்திரமே இருக்கின்றது. இவ்வாறான நிலையில் அவர்களுக்கு மாதத்துக்கு 25 நாட்கள் என்ற அடிப்படையிலேயே கடந்த காலங்களில் வேலை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று அந்த உத்தரவாதம் 10 முதல் 12 வரை குறைந்திருக்கின்றது. அதனால் அவர்களுக்கான ஈபிஎப், ஈடிஎப் கொடுப்பனவும் குறைவடைந்திருக்கின்றது.

மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள விவகாரம் நீதிமன்றம் சென்றுள்ளதால், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைப்பது உத்தரவாதம் இல்லாமல் போயிருக்கின்றது. ஆனால் ஆயிரம் ரூபாவை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை. அதனால் தொழில் அமைச்சர் இது தொடர்பாக கவனம் செலுத்தி இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் ஆறாத காயம் ஏற்பட்டால் அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் தொழிலாளர்கள் குளவி கொட்டு உட்பட பல விபத்துக்களுக்கு ஆளாகி இருக்கின்ற போதும் தோட்ட கம்பனிகள் அவர்களுக்கு எந்தவித நஷ்டஈடும் வழங்குவதில்லை. இதனை கட்டாயமாக்க சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் சம்பள திகதியை நிர்ணயித்து உரிய திகதியில் சம்பளம் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகமான கம்பனிகள் உரிய திகதிக்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை. அதேபோல் பல கம்பனிகள் தொழிலாளர்களுக்கு ஈபிஎப், ஈடிஎப் வழங்குவதில்லை அவ்வாறான கம்பனிகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment