(எம்.மனோசித்ரா)
சிறைச்சாலைகள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக சிறைக் கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அத்தோடு கொவிட் தொற்றின் காரணமாக சிறைக் கைதிகளை உறவினர்களுக்கு பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை உள்ளிட்ட காரணிகளால் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். இவற்றை தடுப்பதற்கான ஒரு வழியாகவும் இந்த முறைமை அமைந்துள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E visit என்ற இந்த முறைமையின் ஊடாக காணொளியூடாக இரு தரப்பினரும் உரையாட முடியும்.
கைதிகளின் உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களாயின் அவர்கள் சிறைச்சாலை திணைக்களத்தின் மின்னஞ்சல் முகவரியூடாக முன்பதிவு செய்து, சிறைச்சாலை அதிகாரியொருவரின் முன் உரையாட முடியும்.
சிறைச்சாலை சட்ட திட்டங்களுக்கமைய முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு வாராந்தமும், தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மாதாந்தமும் இவ்வாறு காணொளி மூலம் உறவினர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும். இதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
இதன் ஆரம்ப கட்டமாக இவ்வாரம் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் காணொளியூடாக உரையாட வாய்ப்பளிக்கப்பட்டது.
தற்போது நாட்டிலுள்ள பெரும்பாலான சிறைச்சாலைகளில் இந்த வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் நாளொன்றுக்கு 400 கைதிகள் பயன்பெறுவர்.
No comments:
Post a Comment