ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்து ஆண்டு நிறைவு விழாவை புறக்கணித்தார் விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 2, 2021

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்து ஆண்டு நிறைவு விழாவை புறக்கணித்தார் விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்து ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்காளி கட்சியின் உறுப்பினர்களின் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் அவரது பிரநிதியொருவர் கலந்து கொண்டார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுனவின் 5 ஆண்டு கால நிறைவு விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து ஒரு தரப்பினர் வெளியேறி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதி தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ பதவி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 2019ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டது.பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பதவி வகிக்கின்றனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம் பெற்ற பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 70 இற்கும் அதிகமான உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி பொதுஜன பெரமுன 52.25 சதவீத வாக்கினை பெற்று வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளை ஒன்றினைத்து 'ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன' கூட்டணியமைத்து போட்டியிட்டது.

பொதுத் தேர்தலில் 59.09 வீத வாக்குகளினால் வெற்றி பெற்று 145 ஆசனங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களுடன் அரசாங்கத்தை ஸ்தாபித்தது.

இவ்வாறான பின்னணியில் இன்றையதினம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 5 ஆண்டு கால நிறைவை கொண்டாடியது.

அந்நிகழ்வில் கட்சியின் ஸ்தாபகர் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதான உரையை ஆற்றினார். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ காணொளி முறைமை ஊடாக வாழ்த்து செய்தியை தெரிவித்தார். அத்துடன் கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிகழ்வில் விசேட உரையாற்றினார்.

நிகழ்வில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment