இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையே ஒரு நாடு ஒரு சட்டம் : தொகுதிவாரி தேர்தல் முறையை ஏற்படுத்தி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க நடவடிக்கை - வேலுகுமார் - News View

Breaking

Wednesday, November 24, 2021

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையே ஒரு நாடு ஒரு சட்டம் : தொகுதிவாரி தேர்தல் முறையை ஏற்படுத்தி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க நடவடிக்கை - வேலுகுமார்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையே ஒரு நாடு ஒரு சட்டம். இது நாட்டை மோசமான அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என எம் வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவினத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி புரட்சிகமான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்து இரசாயன உரத்தை ஒரே இரவில் வர்த்தமானி வெளியிட்டு தடை செய்தார். பின்னர் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து அந்த வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

அதேபோன்று நாட்டில் தேர்தல் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரசாயன உரத்துக்கு வர்த்தமானி வெளியிட்டு வாபஸ் பெற்றதைபோன்று தேர்தல் திருத்த சட்டத்தை மேற்கொள்ள முடியாது. அது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து சிறுபான்மை கட்சிகளின் ஆலாேசனைகளை பெற்றே அதனை மேற்கொள்ளவேண்டும். தொகுதிவாரி தேர்தல் முறையை ஏற்படுத்தி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அதேபோன்று ஒரே நாடு ஒரே சட்டம் நாட்டை மோசமான அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும். கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தியவரிடமே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி ஒப்படைக்கப்பட்டுள்ளது இதனை நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் முற்றாக எதிர்க்கின்றார்கள்.

இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர இத்தகைய செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் 2009 க்கு முன்னர் வடக்கு தெற்கு பிளவுபட்டே இருந்தது. என்றாலும் அதன் பின்னர் வடக்கு தெற்கை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் பூமியை ஒன்றிணைக்க முடிந்தாலும் இன, மத, சமூக ரீதியில் மக்கள் மனதை வெற்றி கொள்ள முடியாமல் போயுள்ளதை குறிப்பிட வேண்டும்.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை கட்டியெழுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்த அடிப்படையே சீர்குலைந்து இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் தேர்தல் முறைமை அனைத்து இன, மத மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும். புதிய தேர்தல் முறை மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு என்ன நடக்கும் என சிந்திக்கத் தோன்றுகிறது.

பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்துக்களை கொண்ட கட்சிகள் உள்ளன. குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் விகிதாசார முறைமையின் கீழேயே சுதந்திரமாக இந்த சபையில் கூட பேச முடியும் என்றார்.

No comments:

Post a Comment