ஜனாதிபதி தனது தனிப்பட்ட சட்டத்தரணிகளை கொண்டு அரசியல் அமைப்பை உருவாக்குகின்றார் : 20 இனால் ஆணைக்குழுக்கள் அனைத்தும் சுயாதீனத்தை இழந்துள்ளது - லக்ஸ்மன் கிரியெல்ல - News View

Breaking

Wednesday, November 24, 2021

ஜனாதிபதி தனது தனிப்பட்ட சட்டத்தரணிகளை கொண்டு அரசியல் அமைப்பை உருவாக்குகின்றார் : 20 இனால் ஆணைக்குழுக்கள் அனைத்தும் சுயாதீனத்தை இழந்துள்ளது - லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஒருபுறம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக கூறிக் கொண்டு, மறுபுறம் 13 ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி தரப்பு தமக்கு அறிவித்துள்ளதாகவும், இந்த செயற்பாட்டில் அர்த்தமுள்ளதா என சபையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல, புதிய அரசியல் அமைப்பிநூடாகவேனும் அதிகார பரவலாக்கலை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சியின் சுயாதீனமாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்தும் இன்று 20 ஆம் திருத்தத்தின் மூலமாக அதன் சுயாதீனத்தை இழந்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாக இவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எமது ஆட்சியில் ஜனாதிபதியின் கோரிக்கையை கூட நிராகரிக்கும் அதிகாரம் சுயாதீன அணைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று அதன் சுயாதீனம் அழிக்கப்பட்டுள்ளது.

அன்று சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் ஜே.வி.பி வலியுறுத்தியதற்கு அமைய இவை உருவாக்கப்பட்டன, இன்று அதன் நிலைமை மோசமாகியுள்ளது. சுயாதீன நீதிமன்றம் இல்லாத காரணத்தினால் இன்று முதலீட்டார்கள் நாட்டிற்கு வர விரும்பவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முதற்கொண்டு 20 ஆம் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். இது இலங்கையின் நற்பெயருக்கு பாரிய களங்கமாகும்.

எமது அரசாங்கத்தில் 19 ஆம் திருத்தத்தை உருவாக்கி நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்தினோம். அரச அதிகாரத்திற்கு நாம் அடிபணியவில்லை.

இன்று 20 ஆம் திருத்தத்தில் பல குறைபாடுகள் இருந்தும் எவ்வாறு நீங்கள் இதற்கு ஆதரவு வழங்கினீர்கள் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது.

அதிகார பரவலாக்கல் இல்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. எனவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திலேனும் இவற்றை உறுதிப்படுத்துங்கள்.

இன்று புதிய அரசியல் அமைப்பு குறித்து பேசுகின்றனர். நாம் இன்னும் அதன் நகலை கூட பார்க்கவில்லை. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சகல கட்சிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான தெரிவுக்குழு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது இடம்பெற்றது.

இன்று ஜனாதிபதி என்ன செய்கின்றார். தனது தனிப்பட்ட சட்டத்தரணிகளை கொண்டு அரசியல் அமைப்பை உருவாக்குகின்றார். இவ்வாறு செயற்பட்டால் இந்த அரசியல் அமைப்பையும் வர்த்தமானிகள் போன்று மீளப் பெற்றுக் கொள்ள வேண்டிவரும். அதுவே இடம்பெறும்.

எமது யோசனைகளை முன்வைக்கையில் 13 ஆம் திருத்தம் தவிர அனைத்தையும் கூறுங்கள் எனவும் கூறினார்கள். ஒருபுறம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது குறித்து பேசிக்கொண்டு மறுபுறம் 13 ஏற்றுக் கொள்ளப்படாதென கூறுகின்றனர். இந்த செயற்பாட்டில் அர்த்தமுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment