அரசாங்கத்திற்கு எதிராக நுவரெலியாவில் விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி - News View

Breaking

Sunday, November 21, 2021

அரசாங்கத்திற்கு எதிராக நுவரெலியாவில் விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

இரசாயன உரம், கிருமி நாசினி போன்றவற்றை பெற்றுதரக் கோரி நுவரெலியா மாவட்ட விவசாயிகள் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நுவரெலியா நகரில் மேற்கொண்டனர்.

"நுவரெலியா சுதந்திர விவசாய சங்கத்தின்" ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானுஓயா, மீப்லிமான, கலாபுரம், சீத்தாஎலிய மற்றும் லபுகலை உட்பட பல பிரதேசங்களில் இருந்து பெருந்திரளான விவசாயிகளும் நுவரெலியா, கந்தப்பளை மற்றும் இராகலை பிரதேசங்களில் மரக்கறி வியாபாரிகளும் கலந்துக்கொண்டனர்.

இந்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா வெலிமட வீதியில், நானுஓயா சந்திக்கு அருகில் ஆரம்பித்து தர்மபால சுற்றுவட்டாரம், எலிசபெத் வீதி, கண்டி வீதி, பழையகடை வீதி மற்றும் புதியகடை வீதி வழியாக நுவரெலியா பிரதான தபால் கந்தோருக்கு முன்னால் எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த பேரணிக்கு நுவரெலியா பொலிஸார் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் முழு பாதுகாப்பு வழங்கினார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை 10 மணியளவில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி நண்பகல் 12.45 மணியளவில் முடிவடைந்தது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா நகர வர்த்தக நிலையங்களும் கந்தப்பளை, இராகலை மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய வர்த்தக நிலையங்களும் மூடி ஆதரவு தெரிவித்தார்கள்.

இன்று நடைபெற்ற இந்த பேரணியை முன்னிட்டு நுவரெலியா, இராகலை, கந்தப்பளை மரக்கறி வியாபாரத்தை நிறுத்தியுள்ளார்கள்.

நுவரெலியா சுதந்திர விவவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியில் எந்தவொரு அரசியவாதிகளும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment