எனது தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு : சஹ்ரான் குழுவுடன் நேரடி தொடர்பு வைத்திருந்த இருவரை விடுவிக்க அழுத்தம் கொடுத்தது யார் ? - முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

எனது தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு : சஹ்ரான் குழுவுடன் நேரடி தொடர்பு வைத்திருந்த இருவரை விடுவிக்க அழுத்தம் கொடுத்தது யார் ? - முஜிபுர் ரஹ்மான்

(ஆர்.யசி.,எம்.ஆர்.எம்.வசீம்)

எனது தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்கும் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவு, சஹ்ரானின் குழுவுடன் நேரடி தொடர்பு வைத்திருந்த 2 நபர்களை சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக விடுவித்துள்ளது. அதற்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறப்பட்டிருப்பது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2005 இல் வெளிநாட்டில் இருந்து வந்த நேரம் கையடக்க சிம் அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருந்ததால், எனது நண்பன் ஒருவரின் பெயருக்கு சிம் அட்டை ஒன்றை பெற்றுக் கொண்டேன். பின்னர் அதனை எனது பெயருக்கு மாற்றிக் கொண்டேன். அன்று முதல் இன்றுவரை அந்த தொலைபேசி இலக்கத்தையே பயன்படுத்தி வருகின்றேன்.

என்றாலும் எனக்கு தொலைபேசி இலக்கத்தை பெற்றுத்தர உதவிய குறித்த நபரை பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் பிரதானி, கடந்த மாதம் 7ஆம் திகதி விசாரணைக்கு அழைத்திருந்தார். அவரிடம் எனது தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக நீண்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதன்போது அந்த நபர் இந்த தொலைபேசி இலக்கத்தை பாவிப்பது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் என எனது பெயரை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் எனது தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகள் ஒற்றுக்கேட்கப்படுகின்றதாகவே தெரியவருகின்றது.

இந்த நடவடிக்கையால் பயங்கரவாத தடுப்பு பிரிவு எனது பாராளுமன்ற வரப்பிரசாதத்தை மீறி இருக்கின்றது. அதனால் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை பிரிவின் பிரதானியை பாராளுமன்ற வரப்பிரசாத குழுவுக்கு அழைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கி்றேன்.

அத்துடன் 2019 நவம்பர் 16ஆம் திகதிக்கு மன்னர் சஹ்ரானின் கூட்டத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்த 2 பேர் பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் சஹ்ரானின் வகுப்புகளுக்கு அறியால் சென்ற பல இளைஞர்கள் இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் சஹ்ரானின் குழுவுடன் தொடர்பு வைத்திருந்த குறித்த இரண்டு பேரையும் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக விடுவிக்கவும் அதற்கு அழுத்தம் காெடுத்தது யார் என்பதை முடியுமானால் தேடிப்பார்க்க வேண்டும் என பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதானியை கேட்டுக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment