(இராசதுரை ஹஷான்)
புறக்கணிக்கப்பட்ட சேதனப் பசளையை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு சீனா இராஜதந்திர மட்டத்தில் அழுத்தம் பிரயோகிக்கிறது. இலங்கையின் காலநிலைக்கும், மண் வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சீன நாட்டு உரம் நாட்டுக்குள் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் தவறான தீர்மானத்தினால் ஏற்படப்போகும் அழிவிற்கு முழு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் நாடு தற்போது பெரும் அழிவை நோக்கி பயணிக்கிறது. மரக்கறி, தானிய வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்களின் விலை தற்போதைய விற்பனை விலையை காட்டிலும் எதிர்வரும் மாதம் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும்.
சோளப் பயிர்ச் செய்கையுடன் கூடிய உற்பத்திகளும் பாதிக்கப்படுவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. சேதனப் பசளைத் திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும், அதனை கட்டம் கட்டமாக செயற்படுத்துவது அவசியமாகும். சேதனப் பசளை மாத்திரம் பயன்படுத்தி விவசாயத்துறையில் முன்னேற்றமடைந்த நாடுகள் உலகில் கிடையாது.
ஜனாதிபதி எவ்விதமான தூரநோக்கு சிந்தனையில்லாமல், தவறான ஆலோசனைகளுடன் இரசாயன உரத்தை உடனடியாக தடை செய்து, சேதனப் பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
உரத்தை கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவர்களை அரசியல்வாதிகளாக விமர்சித்து, அவர்களின் போராட்டத்தை விவசாயத்துறை அமைச்சர் மலினப்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.
தேசிய மட்டத்தில் சேதனப் பசளைத் திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து சேதன பற்றீரியா அடங்கிய சேதனப் பசளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, புறக்கணிக்கப்பட்டது.
புறக்கணிக்கப்பட்ட சீன நாட்டு உரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு சீனா இராஜதந்திர மட்டத்தில் அழுத்தம் பிரயோகித்துள்ளது. திருப்பியனுப்பப்பட்ட சேதனப் பசளை அடங்கிய சீன நாட்டு கப்பல் மீண்டும் துறைமுகத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
சீனாவில் இருந்து சேதனப் பசளையை கொண்டு வரும் உள்நாட்டு முகவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான அதிகாரியின் உறவினர் என்பது தற்போது வெளியாகியுள்ளது. இதனை எவரும் இதுவரையில் மறுக்கவில்லை.
தரமற்ற உரத்தின் பின்னணியில் நிதி மோசடி காணப்படுகிறது. இதனுடன் தொடர்புடையவர்கள் எதிர்காலத்தில் பொறுப்புக்கூற வேண்டும்.
மறுபுறம் இந்தியாவில் இருந்து நெனோ-நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள திரவ உரம் விவசாய நடவடிக்கைகளுக்கு போதுமானதல்ல, ஒரு ஹேக்கர் நிலப்பரப்பிற்கு சுமார் 1,250 லீட்டருக்கும் அதிகளவில் நெனோ-நைட்ரஜன் அவசியம் என விவசாயத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். யூரியாவில் உள்ள பதார்த்தங்களை உள்ளடக்கியே நெனோ-நைட்ரஜன் திரவ உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த உர திரவம் இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு உகந்ததா என்பது தொடர்பில் எவ்வித பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு எவர் பொறுப்பேற்பது.
மருந்து, தேங்காய் எண்ணெய், வெள்ளைப்பூண்டு, சீனி, அரிசி தற்போது உரம் என பல்வேறு பொருட்களில் அரசாங்கம் சுபீட்சமான கொள்கைத் திட்டம் என்ற பெயரை முன்னிலைப்படுத்தி மோசடி செய்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவிற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment