தலையில் மகுடத்தை அணிந்தால் போதாது மக்களின் துன்பத்தை தீர்க்க வேண்டும், இவர்களும் தாக்குதல்களுடன் தொடர்பா என்ற சந்தேகம் : பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை - News View

Breaking

Wednesday, November 24, 2021

தலையில் மகுடத்தை அணிந்தால் போதாது மக்களின் துன்பத்தை தீர்க்க வேண்டும், இவர்களும் தாக்குதல்களுடன் தொடர்பா என்ற சந்தேகம் : பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளையேனும் நடைமுறைப்படுத்துமாறு உரிய தரப்பினரிடம் பல சந்தர்ப்பங்களிலும் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் அவர்களும் இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பாரதூரமானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. தலையில் மகுடத்தைப் போன்ற ஒன்றை அணிந்திருப்பது நாடகங்களில் நடிப்பதற்காகவோ அல்லது வேடிக்கைக்காகவோ அல்ல. நாம் அதனை அணிவதாயின் மக்களின் சுமைகளை தாங்க வேண்டும். அவர்களின் துன்பங்களை நீக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் பொறுப்பை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

புனரமைக்கப்பட்ட புனித வாதுவ தேவாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மூலம் நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்துவதில் சில குழுக்கள் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலோட்டமாக வெளிப்படும் விடயங்களை விட, இதன் பல விடயங்கள் காணப்படுவதை நாம் உணர்ந்து கொண்டிருக்கின்றோம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. எமக்கு யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை கிடையாது. யார் மீதும் கோபம் கிடையாது. எனினும் எமக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.

269 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் பங்குபற்றி வீட்டிற்கு செல்ல தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களுக்கே இந்த சோகம் இடம்பெற்றது. சிலர் தமது குடும்பத்தை இழந்துள்ளனர். மேலும் பலர் வாழ் நாள் முழுவதும் குணப்படுத்த முடியாதளவிற்கு அங்கவீனமடைந்துள்ளனர். இவர்களின் மனங்களில் உள்ள வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது. அதனை இலகுவாகக் கடந்து செல்லவும் முடியாது.

இந்த வேதனையை போக்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொண்டவர்கள் யார்? , அதற்கான காரணம் என்ன? என்பவற்றின் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதனை கண்டறியும் வரை நாம் எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. இந்த பணியை முடிக்கும் வரை அனைவரையும் ஒன்றாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் நமது தியாகம் பயனற்றதாகும்.

நாம் நம் உயிரைப் பணயம் வைத்து மக்களை நேசிக்க வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதிலிருந்து நாம் தப்ப முடியாது. எனவே, இந்த முயற்சியில் ஒன்றுபட்ட ஆதரவிற்காக அருட் தந்தையர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டில் தற்போது பாரதூரமானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. தலையில் மகுடத்தைப் போன்ற ஒன்றை அணிந்திருப்பது நாடகங்களில் நடிப்பதற்காகவோ அல்லது வேடிக்கைக்காகவோ அல்ல. நாம் அதனை அணிவதாயின் மக்களின் சுமைகளை தாங்க வேண்டும். அவர்களின் துன்பங்களை நீக்க வேண்டும்.

இருநூறுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டதைப் போல, தாக்குதலை அறிந்தவர்கள் மற்றும் உயர் பதவியில் வாக்குறுதிகளை வழங்கியவர்கள் இப்போது எதுவும் தெரியாதவர்களைப் போன்றிருப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமலுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளையேனும் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாம் எவ்வளவு கூறினாலும் அவர்கள் அதை செய்யவில்லை. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் அவர்களுடன் இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அவர்களால் எதனையும் செய்ய முடியவில்லையெனில் செய்யக் கூடியவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். நாம் அரசியல் செய்யவில்லை. எமது தேவை உண்மையையும் யதார்த்தத்தையும் தெரிந்து கொள்வதாகும்.

எனவே, அனைத்து கத்தோலிக்கர்களும் இந்தப் பிரச்சினையில் ஒன்றுபட்டு நின்று, இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்ற உண்மையைக் கண்டறிய அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment