8 ஆம் திகதிக்கு பின்னர் போராட்டம் மேலும் வலுப்பெறும் - இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

Breaking

Wednesday, November 3, 2021

8 ஆம் திகதிக்கு பின்னர் போராட்டம் மேலும் வலுப்பெறும் - இலங்கை ஆசிரியர் சங்கம்

(எம்.மனோசித்ரா)

வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் 8 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் பெற்றோர் எம்முடன் இணைந்துள்ளனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பெற்றோர் எமக்காக போராட்டத்தில் இணைந்துள்ளனர். பெற்றோருக்கும் எமக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சித்த போதிலும் அந்த முயற்சி தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் எமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் 8 ஆம் திகதிக்கு பின்னர் வேறு வகையில் எமது போராட்டம் வலுப்பெறும்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தான் அனைத்தையும் அறிந்தவரைப் போன்று அதிபர், ஆசிரியர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காமல் பண்டிதரை போன்று செயற்படுகின்றார்.

பெற்றோர் எம்முடன் இணைந்துள்ளதன் மூலமாக அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் தற்போது புதிய பரிணாமம் பெற்றுள்ளது என்றார்.

No comments:

Post a Comment