உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு : வாக்காளர் டாப்பு பெயர் பதிவுக்கு டிசம்பர் 03 வரை கால அவகாசம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு : வாக்காளர் டாப்பு பெயர் பதிவுக்கு டிசம்பர் 03 வரை கால அவகாசம்

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவற்காக அரசியலமைப்பு ரீதியிலான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளமாறு அனைத்து மாவட்ட, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்றுமுன்தினம் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் கூட்டத்தில் அத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய தற்போது செயற்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் காலம் 2022ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதியுடன் நிறைவு பெறும்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவு பெற்ற தினத்திலிருந்து மேலும் ஒரு வருட காலத்திற்கு தேர்தலை பிற்போடும் அதிகாரம் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உண்டு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்திற்கமைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவு பெறுவதற்கு முன் 06 மாத காலத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருக்கு விடயதானத்திற்குரிய பொறுப்புகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மட்டுப்படுத்தவும், நீடிக்கவும் அதிகாரம் காணப்படுகிறது.

அதற்கமைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை நீடிக்காவிடின் பதவிக் காலம் நிறைவு பெறும் தினத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளுக்குரிய படிவங்களை தயார் செய்யல், அலுவலர்களுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்யல், வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்யல் மற்றும் நடைமுறையில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு எந்நிலையிலும் தயாராகவுள்ளது உள்ளளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது .மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

'பாராளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு முறை ஆகியன பற்றிய மக்களின் நம்பகத்தன்மை பெருமளவிற்கு குறைவடைந்துள்ளது. அத்தேர்தல் முறைமைகள் தேர்தல் செலவுகளை அதிகரிப்பதுடன், கட்சிக்குள்ளும், கட்சிகளுக்கிடையிலும், வேட்பாளர்களுக்கிடையிலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன. ஆகவே கலப்பு விகிதாசர பிரதிநித்துவ முறைமை மிகச்சிறந்த தேர்தல் முறைiயாக கருதப்படுகிறது' என தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு யோசனை முன்வைத்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கல் காரணமாக சுமார் 3 வருட காலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணாமலும், புதிய தேர்தல் சட்டம் உருவாக்காமலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் குழு அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு பின்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என அரசாங்கத்தின் பிரதான தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

அத்துடன் இந்த ஆண்டு (2021) வாக்காளர் டாப்பில் பெயரை பதிவு செய்யத்தவரியவர்கள், அது தொடர்பான தகவல்களை டிசம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

No comments:

Post a Comment