மன்னார் எண்ணெய் கிடங்கு வேலைத்திட்டத்தை முன்னுக்கு காெண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் - ரோஹித்த அபேகுணவர்த்தன - News View

Breaking

Wednesday, October 6, 2021

மன்னார் எண்ணெய் கிடங்கு வேலைத்திட்டத்தை முன்னுக்கு காெண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் - ரோஹித்த அபேகுணவர்த்தன

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

மன்னாரில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் உள்ள எரிபொருள் மற்றும் எரிவாயுவை கடந்த ஆட்சியாளர்கள் வெளிக்கொண்டுவர முயற்சித்திருந்தால் நாடு அதன் பயனை இன்று அனுபவித்திருக்கும் என துறைமுகங்கள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எந்தவொரு முதலீட்டையும் தவறான கோணத்தில் பார்த்தால் ஒரு நாடாக நாம் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. கொள்கை ரீதியாக தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அரசாங்கங்கள் மாறும் போது கொள்கைகள் மாறக்கூடாது. வரலாறு முழுவதும் அரசாங்கங்கள் மாறும் போது அதன் கொள்கைகளும் மாறியமையால்தான் ஒரு நாடாக எம்மால் முன்னேற முடியாதுள்ளது.

முதலீட்டாளர்கள் நாட்டை நோக்கி வர வேண்டும் என்றால், நாட்டின் மீது அவர்களுக்கு முதலில் நம்பிக்கை ஏற்பட வேண்டும். இரத்தினபுரிக்குச் சென்று 10 குழியை தோன்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவது போன்றதொரு பணியல்ல இது. முதலீட்டாளர்களுக்கு நம்பகத் தன்மையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எரிவாயு மற்றும் எரிபொருளை நாம் மேல் கொண்டு வந்தால் எமது நாட்டின் எதிர்காலம் அங்குதான் உள்ளது. இந்தப் பணிகளை செய்யும் போது மன்னாரை விற்று விட்டனர், கிழக்கு முனையத்தை விற்று விட்டனர் எனக் கூச்சலிடுகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் போது நாம் ஆட்சியில் இருப்போமா இல்லையா என்று தெரியாது. ஆனால் நாட்டின் எதிர்காலத்திற்கான புள்ளியை வைத்துள்ளோம்.

அமைச்சர் உதய கம்மன்பில போன்று வரலாற்றில் எவரும் முயற்சித்திருந்தால் இன்று மன்னார் எண்ணெய் கிடங்குகளின் பயனை நாம் பெற்றிருக்க முடியும்.

எனவே மன்னார் எண்ணெய் கிடங்குகள் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமாக கருதி, இந்த வேலைத்திட்டத்தை முன்னுக்கு காெண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment