பயங்கரவாத தடைச் சட்டத்தை விஷேடமாக பயன்படுத்த காரணம் என்ன : சட்டமா அதிபர் தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதியரசர் யசந்த கோதாகொட - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தை விஷேடமாக பயன்படுத்த காரணம் என்ன : சட்டமா அதிபர் தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதியரசர் யசந்த கோதாகொட

(எம்.எப்.எம்.பஸீர்)

இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்கள் தொடர்பாக தண்டனை சட்டக் கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமான விதி விதானங்கள் இருக்கும் நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை விஷேடமாக பயன்படுத்த காரணம் என்ன என உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட சட்டமா அதிபர் தரப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகள் கடந்த திங்களன்று (4) பரிசீலனைக்கு வந்த போதே அவர் இதனை திறந்த மன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவானது, உயர் நீதிமன்ற நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ, யசந்த கோதாகொட, எஸ். துறைராஜா ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

அசாத் சாலி சார்பில் குறித்த மனுவை, காலம் சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தன்னையே மனுதாரராக பெயரிட்டு, தாக்கல் செய்திருந்த நிலையில், புதிய மனுதாரர் ஒருவரை மனுவுக்குள் உள்வாங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி காலம் சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் கனிஷ்ட சட்டத்தரணியாக கடமையாற்றிய தர்மஜா தர்மராஜாவை மனுதாரராக பெயரிட முயற்சிக்கப்பட்டாலும், அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் நபரான அசாத் சாலி தற்போது நீதிமன்ற தடுப்பில் உள்ள நிலையில் அவரையே மனுதாரராக பெயரிடுமாறு நீதியரசர்கள் ஆலோசனை வழங்கினர்.

இவ்வாறான நிலையில், மனுதாரர் சார்பில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனைக்கு அமைய, சட்டத்தரணி பிருந்தா சந்ரகேஷ் உள்ளிட்டோருடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் மன்றில் ஆஜராகி மனுதாரர் சார்பில் விடயங்களை முன் வைத்தார்.

பிரதிவாதிகளுக்காக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மன்றில் ஆஜரானார்.

இவ்வாறான நிலையிலேயே, இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமான பேச்சினை பேசியதற்காக நடவடிக்கை எடுக்க தண்டனை சட்டக் கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழ் தேவையான ஏற்பாடுகள் இருக்கும் நிலையில், விஷேடமாக பயங்கரவாத தடைச் சட்ட விதிவிதாங்களை பயன்படுத்த காரணம் என்ன என நீதியரசர் யசந்த கோதாகொட திறந்த மன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் நீதியரசர் எஸ். துறைராஜாவும், அண்மைக் காலமாக, இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை பலரும் பொது வெளியில் வெளியிடுவதை அவதானிக்க முடிவதாகவும் அவர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மனுதாரர் சார்பில் மன்றில் பிரசன்னமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட், அண்மையில் ஒரு மத குருவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் என கூறியிருந்ததாகவும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியதுடன், சட்ட நடவடிக்கைகள் ஆட்களைப் பார்த்தே முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பு பிரதான நீதிவான், அசாத் சாலியின் பேச்சினை ஆராயும் போது, இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் எந்த பதிவும் மனுதாரரின் குறித்த ஊடக சந்திப்பில் இல்லை என தெரிவித்துள்ளதையும் சிரேஷ்ட சட்டத்தரணி சஹீட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது மன்றில் ஆஜரான அரசின் பிரதி சொல்சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், இந்த மனுவுடன் தொடர்புபட்ட விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்பட போதுமான சான்றுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் காணப்பட்டதால் அவர் தொடர்பில் அச்சத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே இது தொடர்பிலான மனு எதிர்வரும் 11 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் கடந்த எப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா அம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் - 1 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குறித்த அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment