விவசாயிகளுக்கு தேவையான உரத்தை உடனடியாக வழங்குமாறு பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை உடனடியாக வழங்குமாறு பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி போராட்டம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

இரசாயன உரத்தை சேதன உரமாக மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மக்கள் ஆணைக்கு முரண். அதனால் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை உடனடியாக வழங்குமாறு தெரிவித்து இன்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி எதிர்ப்பு கோஷம் எழுப்பியதால் சபை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டுசெல்ல பல தடவைகள் தடங்கல் ஏற்பட்டது.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,

விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயன உரத்தை சேதன பசளைக்கு 10 வருடத்துக்கு மாற்றுவதாக அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கையில் அரசாங்கம் உடனடியாக இரசாயன உரத்தை தடை செய்து சேதன பசளைக்கு செல்ல எடுத்திருக்கும் தீர்மானம் மக்கள் ஆணைக்கு முரணாகும். அதனால் இந்த தீர்மானத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதன்போது சபாநாயகர் இந்த விடயத்தை வேறு ஒரு நேர்த்தில் கொண்டுவந்து பேசுங்கள் என தெரிவித்து அவருக்கு தொடர்ந்து கதைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.

அதனால் ஆவேசப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சபாநாயகரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். என்றாலும் சபாநாயகர் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை கருத்திற் கொள்ளாது சபை நடவடிக்கையை தொடர்ந்து கொண்டு செல்ல கட்டளையிட்டார்.

அதன் பிரகாரம் சபை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது பிரதான எதிர்க்கட்சியினர் தங்களின் ஆசனங்களில் இருந்து எழுந்து, எதிர்ப்பு கோஷங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் வெளியில் இருந்து கொண்டு வந்திருந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் விவசாயிகளை பாதுகாக்குமாறும் தெரிவித்து எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷம் எழுப்பினர்.
எதிர்க்கட்சியினரின் இந்த எதிர்ப்பு காரணமாக சபை நடவடிக்கை தொடர்ந்து கொண்டுசெல்லப்பட்டபோதும், சபையில் உரையாற்றிக் கொண்டிருந்த ஷரித்த ஹேரத்தின் பேச்சுக்கு பல தடவைகள் தடங்கள் ஏற்பட்டன. குறிப்பாக ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் சிறிது நேரத்தில் சபை மத்திக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலரும் சபை நடுவுக்கு வர ஆரம்பித்தனர். அதனால் சபாநாயகர் பல தடவைகள், சபை நடுவில் இருந்த உறுப்பினர்களை தங்களது ஆசனங்களுக்கு செல்லுமாறும் ஆசனங்களில் அமர்ந்தவாறு எதிர்ப்பு தெரிவிக்குமாறும் குறிப்பிட்டு வந்தார். என்றாலும் உறுப்பினர் சிறிது நேரம் சபை நடுவில் இருந்து தங்கள் கைகளில் இருந்த பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு வந்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் வரை எதிர்ப்பு கோஷத்தில் ஈடுபட்டு வந்த உறுப்பினர்கள் பின்னர் அமைதியாக தங்களின் ஆசனங்களுக்கு சென்று அமர்ந்து கொண்டனர். சபை நடவடிக்கைக்கு சிறிது தடங்கள் ஏற்பட்டாலும் இடை நிறுத்தாது முன்னெடுத்துச் செல்ல சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

No comments:

Post a Comment