வரவு செலவுத் திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் வழங்க அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, October 22, 2021

வரவு செலவுத் திட்ட விவாதத்தை சைகை மொழியிலும் வழங்க அனுமதி

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், இதற்கமைய வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், நவம்பர் 09ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் குறித்த சபை ஒத்தி வைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 20ஆம் திகதி, ஒக்டோபர் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகளே இவ்வாறு விவாதத்துக்கு உள்ளாக்கப்படவுள்ளன. இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பாராளுமன்ற தினமாக அமையவிருப்பதுடன், அன்றையதினம் முழுவதையும் வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய கொவிட் சூழல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் வரையறுக்கப்பட்டமையால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய் மூல விடைக்கான 50 கேள்விகளுக்கு அன்றையதினம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையான காலப்பகுதியை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கமைய 08,09,10,11 ஆகிய தினங்களில் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு 2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பை (வரவு செலவுத் திட்ட உரை) நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைப்பார்.

இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர டிசம்பர் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தினங்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.

நவம்பர் 10ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் 11.00 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை 2021 நிதியாண்டுக்கான 2020ஆம் ஆண்டு 07ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தைத் திருத்துவதற்கான சட்ட மூலம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்ட மூலம் ஆகியன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

நவம்பர் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்ட மூலம், வேலையாட்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயது தொடர்பான சட்ட மூலம், பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி, காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

நம்பர் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்தி வைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும், 4.50 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment