(இராஜதுரை ஹஷான்)
கூட்டணி என்ற ரீதியில் அனைத்து பங்காளி கட்சிகளுடனும் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும். யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமையில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை. இரகசியமான முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தும்.
ஆகவே, கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பங்காளி கட்சியினருடன் விரைவாக பேச்சுவார்த்தையில் ஈடுப்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யுகதனவி விவகாரத்தில் தொழிற்சங்கத்தினரதும், நாட்டு மக்களினதும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். 40 சதவீத பங்குகளை பெற்றுக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனம் உலகளாவிய ரீதியில் மின்வலுத்துறையில் முன்னேற்றமடைந்துள்ள 230 நிறுவனங்களின் பட்டியலில் உள்வாங்கப்படவில்லை.
இந்நிறுவனம் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மின்வலுத்துறை தொடர்பிலான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பங்காளி கட்சியினருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment