(நா.தனுஜா)
இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மற்றும் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவாக நடுத்தரகால மதிப்பீடுகள் மந்தகரமான நிலையில் காணப்படுவதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் தற்போதைய பொருளாதார நிலைவரம், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னராக காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றும் உலக வங்கியினால் வருடாந்தம் இருமுறை வெளியிடப்படுகின்ற பிராந்திய ரீதியான மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி 'டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் சேவை வழங்கல் அபிவிருத்தி' என்பன குறித்த பிரத்யேக அவதானத்துடன் தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதாரம் தொடர்பில் உலக வங்கியினால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தெற்காசியப் பிராந்தியத்தின் வருடாந்த சராசரி பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக அமையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
'கொவிட்-19 தொற்றுப் பரவலானது பிராந்தியப் பொருளாதாரத்தில் நீண்ட கால வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இக்காலப்பகுதியில் பல நாடுகள் மிகக்குறைந்தளவிலான முதலீடு அல்லது முதலீட்டு வீழ்ச்சி, நிரம்பல் சங்கிலி சீர்குலைவு, மனித வள முதலீட்டில் பின்னடைவு, கடனளவில் வெகுவான அதிகரிப்பு ஆகியவற்றுக்கு முகங்கொடுத்திருக்கின்றன.
இவ்வாண்டில் தெற்காசியப் பிராந்தியத்தில் 48 - 59 மில்லியன் மக்கள் வறியவர்களாக மாறுவதற்கும் வறுமை நிலையிலேயே இருப்பதற்கும் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாகியுள்ளது' என்று உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் சனத் தொகையில் 50 சதவீதமானோருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகவும் தற்போது புதிய வைரஸ் பரவல் அலைகள் உருவாகுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள உலக வங்கி, இவை பொருளாதார மீட்சியை இலகுபடுத்தக் கூடும் என்றும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி கொவிட்-19 பரவலானது கல்விச் செயற்பாடுகளில் மிகப்பாரிய இடையூறுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும், கல்வியைப் பெறுவதில் ஏற்பட்ட இழப்புக்கள் நாட்டின் மனித மூலதன அடைவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.
மேலும் உயர் கடன் சுமை, பெருமளவான நிதி மீள் செலுத்துகை தேவைப்பாடு, ஸ்திரமற்ற வெளியக இருப்புக்கள் உள்ளடங்கலாக பெரும்பாகப் பொருளாதாரச் சவால்களுக்கு இலங்கை தொடர்ந்தும் முகங்கொடுத்துள்ள நிலையில், அவை நடுத்தர காலத்திற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையைக் குறைத்தல் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிக முக்கிய காரணியாக அமையும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment