(நா.தனுஜா)
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இடைநிறுத்தப்பட்டாலும், கொள்கை ரீதியிலான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அந்த இழப்பைக் கையாள முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, கொள்கை வட்டி வீதங்கள், சுற்றுலாத்துறையின் மீளெழுச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
நாட்டின் வட்டி வீதங்களில் சீரான அதிகரிப்பொன்று அவதானிக்கப்படும் அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் அதன் நிதிப்பாய்ச்சல்களை உரியவாறு கையாளக்கூடிய நிலையிலிருக்கின்றது. அத்தோடு சுற்றுலாத்துறையும் தற்போது மீள்எழுச்சியடைக்கூடிய நிலையில் உள்ளது.
மேலும் இவ்வருடம் எமது நாட்டின் நாணயமாற்று வீதம் 6.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. ஏனைய புறக்காரணிகளின் அழுத்தங்கள் காரணமாகவும் நாம் எதிர்பார்த்ததை விடவும் நாணயமாற்று வீதம் வீழ்ச்சியடைந்த போதிலும், தற்போது அதனை உகந்த மட்டத்தில் பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி ஏனைய நாடுகள் சிலவற்றுடனான கொடுக்கல், வாங்கல்களும் இடம்பெற்று வரும் நிலையில், அதன் மூலம் நாணயமாற்று வீதம் சீரான மட்டத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பதுடன் அதன் மூலம் கடன்களை மீளச் செலுத்துகையும் பொருட்களின் விலைகளும் சாதகமான மாற்றங்களைக் காண்பிக்கும்.
எமது கணிப்பின்படி நாட்டின் சுற்றுலாத்துறை எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது வழமைக்குத் திரும்பும். இலங்கையின் சனத் தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அது சுற்றுலாத் துறையை மீள ஆரம்பிப்பதற்குத் தகுதி வாய்ந்த நாடாக இலங்கையை மாற்றியுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கும் அதேவேளை, அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் கடந்த 2018 இல் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் நான்கில் ஒரு பங்கினரை உள்ளீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றோம்.
தற்போதைய சூழ்நிலையில் எமக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில் எதிர்வரும் காலங்களில் மீளச் செலுத்தவேண்டிய நிதியைச் செலுத்துவதற்கான இயலுமையை நாம் கொண்டிருக்கின்றோம்.
அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இடைநிறுத்தப்பட்டாலும், கொள்கை ரீதியிலான மாற்றங்கள் ஊடாக அந்த இழப்பைக் கையாளமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment