உரப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விவசாயிகளின் நிலங்களை வெளிநாடுகளுக்கு விற்பதே அரசாங்கத்தின் நோக்கம் - குமார வெல்கம - News View

Breaking

Monday, October 18, 2021

உரப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விவசாயிகளின் நிலங்களை வெளிநாடுகளுக்கு விற்பதே அரசாங்கத்தின் நோக்கம் - குமார வெல்கம

(எம்.மனோசித்ரா)

உரப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விவசாயிகளை முற்றாக இல்லாமலாக்கி, அவர்களின் இடங்களைக் கைப்பற்றி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இது அரசாங்கம் வெளிநாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கும் மாபியாவாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

உரப் பற்றாக்குறை மற்றும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்பட மாட்டாது. இந்த அரசாங்கம் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை. அமைச்சர் பந்துல குணவர்தன போன்றோர் தெரிவிக்கும் கருத்துக்களிலிருந்து இவற்றை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

விவசாயத்துறை அமைச்சர் என்ன கூறுகிறார் என்று அவருக்கே புரியவில்லை. காரணம் அவர் சேதன உரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இரசாயன உரமே இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியும் இவ்வாறானதாகவே காணப்படுகிறது. இவை அனைத்தும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போலியான செயற்பாடுகளாகும்.

விவசாயிகளை முற்றாக இல்லாமலாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். விவசாயத்தை முழுமையாக இல்லாமலாக்கி, விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்து அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எனவே இது அரசாங்கம் வெளிநாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கு மாபியாவாகும்.

அதிபர், ஆசிரியர்கள் என்பவர்கள் கடவுளைப் போன்று மதிக்கப்படுபவர்களாவர். எனவே அவர்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களது பிரச்சினையை அரசாங்கத்தினார் தீர்க்க முடியும். அரசாங்கத்தினால் அச்சிடப்படுகின்ற பணத்திற்கு என்னவாகிறது? அண்மையில் கூட 20 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அபிவிருத்தி எனக் கூறிக் கொண்டு தேர்தலில் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர். தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சி நிறைவடைந்த பின்னர் இலங்கை மோசடி ஆட்சியாக மாறியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment