இலங்கையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதே தவிர முழுமையாக நீங்கவில்லை : மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, October 18, 2021

இலங்கையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதே தவிர முழுமையாக நீங்கவில்லை : மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

(ஆர்.யசி)

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவையும், மரணங்களின் எண்ணிக்கையில் குறைவையும் வெளிப்படுத்துகின்ற நிலையில் நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதென கூற முடியும் என்கின்றனர் சுகாதார வைத்திய நிபுணர்கள்.

வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதே தவிர முழுமையாக நீங்கவில்லை. எனவே மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஏனையவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்த இது குறித்து கூறுகையில், கொவிட் வைரஸ் பரவல் ஏனைய வைரஸ்கள் போன்று இலகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒன்றல்ல, உலகில் சகல நாடுகளும் இன்னமும் கொவிட்டுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பல நாடுகள் நிலைமைகளை கையாள பழகிக் கொண்டுள்ளனர். அதேபோல் இலங்கையும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் வெற்றி கண்டுள்ள நிலையில் இது வைரஸ் பரவலில் இருந்து விடுபட சாதகமான நிலைமையை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இப்போது நாட்டில் வைரஸ் பரவல் மற்றும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. நாளாந்த மரணங்கள் 30 இற்கும் குறைவாக உள்ளது, நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அறுநூறு என்ற அளவில் உள்ளது, இது சாதகமான நிலை என்றே நாம் கருதுகின்றோம்.

எனினும் வைத்திய துறையினராக நாம் மீண்டும் கூறுவது ஒன்றுதான், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதே தவிர முழுமையாக நீங்கவில்லை. எனவே மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஏனையவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி செயற்பட வேண்டும்.

நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைக்க முடியாத நிலையில் அரசாங்கம் பாரிய அளவில் நிதி ஒதுக்கி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டை புதிய வழமைகளுக்கு கொண்டு செல்ல எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கொவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்த காலங்களில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை தளர்த்தப்படுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்களை கூறினாலும் அச்சுறுத்தல் நிலை எம் சகலர் மத்தியிலும் உள்ளது.

ஆனால் இறுதியாக கிடைக்கப் பெற்ற தரவுகளுக்கு அமைய நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது வெளிப்படுகின்றது, இறுதியாக நேற்று கிடைத்த சுகாதார திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய அறுநூற்று ஐம்பதற்கும் குறைவான கொவிட் வைரஸ் தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மரணங்களும் வெகுவாக குறைவடைந்துள்ளது.

எனவே கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் இந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோல் எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டில் சகல மாவட்டங்களிலும் உள்ள இருநூறுக்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஐந்தாம் தரத்திற்கு குறைவான வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளில் சகலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெற்றிகரமாக இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என கருதுகின்றோம்.

அதேபோல் சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக சகல மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். எமது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment