அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கறுப்புச் சந்தை முதலாளிகளிடம் : 'பன்டோரா பேப்பர்ஸ்' சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில் நிதித் திருத்தச் சட்டம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் - ஜே.சி. அலவத்துவல - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கறுப்புச் சந்தை முதலாளிகளிடம் : 'பன்டோரா பேப்பர்ஸ்' சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில் நிதித் திருத்தச் சட்டம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் - ஜே.சி. அலவத்துவல

(நா.தனுஜா)

நல்லாட்சி அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது, 'உலக சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலையதிகரிப்பிற்கு ஏற்றவாறு நாட்டிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின், அரசாங்கம் எதற்கு?' என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்களா ? என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் கறுப்புச் சந்தை முதலாளிகளிடம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இயங்க வேண்டியதன் அவசியமென்ன? என்று அவர்களிடம் கேட்க விரும்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மைக் காலங்களில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக உரிய திணைக்களங்களுக்கு முன்னால் பெருமளவானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மிகக்குறுகிய காலத்திற்குள் எரிவாயு, பால்மா, கோதுமைமா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

அரிசி மாத்திரமன்றி, எரிவாயு மற்றும் பால்மா உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் தமக்கு நெருக்கமான பெரு வர்த்தகர்கள் தீர்மானிக்கக் கூடியவாறான நிலையை அரசாங்கம் தற்போது உருவாக்கியிருக்கின்றது.

பொதுத் தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரிய இந்த அரசாங்கம், அதனைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கெனக்கூறி அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றிக் கொண்டது.

ஆனால் இவ்வனைத்து அதிகாரங்களையும் பெற்றுக் கொண்ட அரசாங்கத்தினால் மக்களின் பிரச்சினைகளில் குறைந்தபட்சம் ஒன்றுக்கேனும் உரியவாறு தீர்வை வழங்க முடியவில்லை.

அடுத்ததாக அண்மையில் வெளியான 'பன்டோரா பேப்பர்ஸ்' பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதித் திருத்தச் சட்டம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளடங்கலாக சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகள் ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் பலர், கடந்த கால குற்றச்சாட்டுக்களிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment