அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை நிதி அமைச்சர் தெளிவாக அறிவிப்பார் - டலஸ் அழகப்பெரும - News View

Breaking

Tuesday, October 12, 2021

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை நிதி அமைச்சர் தெளிவாக அறிவிப்பார் - டலஸ் அழகப்பெரும

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்படும் தினத்தில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படும் வழிமுறை குறித்து நிதி அமைச்சரினால் தெளிவாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தொற்றின் காரணமாக நாட்டில் கல்வித்துறை பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே அதிபர், ஆசிரியர்களால் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

மாணவர்களின் நலனைக் கருதும் அதேவேளை, அதிபர் ஆசிரியர்களின் நீண்ட கால சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வினை வழங்குவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கமைய ஏற்கனவே தீர்மானித்துள்ளதன் அடிப்படையில் நவம்பரில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும்.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை 4 கட்டங்களாக வழங்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதனை செயற்படுத்தும்போது அது ஜனாதிபதியின் பதவி காலத்திற்கும் அப்பால் செல்லும்.

அத்தோடு அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்பதை நிதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனவே நவம்பர் 12 ஆம் திகதி வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது இது தொடர்பில் அவர் தெளிவாக அறிவிப்பதாக இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார். அவரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment