நா.தனுஜா
இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் 'பிரியாவிடை சந்திப்பை' நிகழ்த்திய இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் அகிரா சுகியாமாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜப்பானியத் தூதுவர் என்ற அடிப்படையில் அகிரா சுகியாமாவின் 3 வருட பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, அவர் எதிர்க்கட்சித் தலைவருடனான இந்தப் 'பிரியாவிடை சந்திப்பை' நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா, பல்வேறு வேலைப்பளுவிற்கு மத்தியிலும் இச்சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கை போன்றதொரு அழகான நாட்டில் 3 வருடங்கள் தூதுவராகப் பணியாற்றிமையையிட்டுத் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
அதுமாத்திரமன்றி இக்காலப்பகுதியில் தம்முடன் பேணிய நட்புறவிற்கும் வழங்கிய அனைத்து விதமான ஒத்துழைப்புக்களுக்கும் அவர் நன்றியையும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 'நீண்ட காலமாக ஜப்பான் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி கூற விரும்புகின்றேன். குறிப்பாக பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இலங்கைக்கு ஜப்பான் பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கின்றது.
உதாரணமாக ஜைக்கா போன்ற பல்வேறு செயற்திட்டங்களின் ஊடாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஜப்பான் குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது' என்று சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'பசுமை செயற்திட்டங்கள்' தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பானியத் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
அவற்றை செவிமடுத்த அகிரா சுகியாமா, தனது பதவிக் காலம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இவையனைத்தையும் தனது அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவதாக உறுதியளித்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பசுமை செயற்திட்டங்களைப் பெரிதும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவர் அவரது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் இதன்போது எதிர்வுகூறியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment