'வான் பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்த விமானங்கள்' - சீனா மீது தாய்வான் புகார் - News View

Breaking

Saturday, October 2, 2021

'வான் பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்த விமானங்கள்' - சீனா மீது தாய்வான் புகார்

தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்தில், வெள்ளிக்கிழமை அன்று சீனாவின் 38 படை விமானங்கள் அத்துமீறிப் பறந்ததாகத் தாய்வான் கூறியுள்ளது. இதுவரை சீனா மேற்கொண்டவற்றிலேயே மிகப்பெரிய ஊடுவல் இது என்றும் குறிப்பிட்டுள்ளது தாய்வான்.

அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட விமானங்கள் உள்ளிட்ட சீனப் பாதுகாப்புப் படை விமானங்கள் தாய்வான் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (ADIZ) இரு அலைகளாக பறந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் என்பது ஒரு நாட்டின் நிலப்பகுதிக்கும், அந்நாட்டின் வான் பகுதிக்கும் வெளியே உள்ள பகுதி. ஆனால் நாட்டின் பாதுகாப்பு கருதி, அப்பகுதிக்குள் வரும் வெளிநாட்டு விமானங்கள் அடையாளப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

அப்பகுதி தாய்வான் தானே அறிவித்துக் கொண்ட ஒன்று. விதிமுறைப்படி பார்த்தால் அப்பகுதி ஒரு சர்வதேச வான் பகுதியாகத்தான் இருக்கிறது.

சீனா பாதுகாப்புப் படை விமானங்கள் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்தில் நுழைந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தங்கள் படை விமானங்களையும், ஏவுகணை அமைப்புகளையும் உடனடியாக பறக்கவிட உத்தரவிட்டது தாய்வான்.

தாய்வான் தனது மாகாணங்களில் ஒன்று என்று பார்க்கிறது சீனா. ஆனால் தாய்வானோ தன்னை ஒரு தனி நாடாக கருதுகிறது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகவே சீனப் படை விமானங்கள், தாய்வானுக்கு அருகில் வந்து அச்சுறுத்துவதாக தாய்வான் தொடர்ந்து புகார் கூறி வருகிறது.

"சீனா தொடர்ந்து படை ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவது, அப்பிராந்தியத்தின் அமைதியை குலைக்கிறது" என தாய்வானின் பிரீமியர் சு ட்செங் சங் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சீனா இதுவரை பொதுவெளியில் எதையும் கூறவில்லை.

இதுபோன்ற படை நடவடிக்கைகள் தன் இறையாண்மையைப் பாதுகாக்கவும், தாய்வான் மற்றும் அமெரிக்க கூட்டுச் சதியை இலக்கு வைக்கவும் நடத்தப்படுவதாக இதற்கு முன் கூறியுள்ளது சீனா.

சீன ராணுவத்தின் 25 விமானங்கள், பகல் நேரத்தில் தாய்வானின் ப்ராடாஸ் தீவின் பவளப்பாறை பகுதிக்கு அருகில், தென் மேற்கு வான் பாதுகாப்பு எல்லை பகுதிக்குள் நுழைந்ததாக, தாய்வானின் பாதுகாப்பு அமைச்சக செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 13 சீன ராணுவ விமானங்கள் அதே பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வானுக்கு நடுவில் பறந்தன. இதை தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சீனாவின் படை விமானங்களில் அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய H-6 விமானங்களும் அடக்கம் என்று அவ்வமைச்சகம் கூறியுள்ளது.

தாய்வான் கூறும் அரசியல் கருத்துக்களுக்கு அவ்வப்போது சீனா இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தும். ஆனால் இந்த முறை சீனா தாய்வான் வான் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைய எது காரணமாக அமைந்தது என்று தெரியவில்லை.

1940 களில் ஓர் உள்நாட்டுப் போரின்போது தாய்வான் மற்றும் சீனா பிரிந்தன. சீனாவோ ஏதோ ஒரு கட்டத்தில், தேவைப்பட்டால் ராணுவத்தைப் பயன்படுத்தியேனும் தாய்வானை கைப்பற்றுவோம் என கூறி வருகிறது.

தாய்வானுக்கு என்று தனி அரசமைப்புச் சட்டமும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், 3 லட்சம் பேர் கொண்ட ராணுவமும் உள்ளது.

தாய்வான் நாட்டை சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கின்றன. பல நாடுகள் பெய்ஜிங்கில் இருக்கும் சீன அரசை அங்கீகரிக்கின்றன. அமெரிக்காவுக்கு தாய்வானுடன் எந்த வித அதிகாரபூர்வ தொடர்பும் இல்லை, ஆனால் தாய்வான் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளத் தேவையான உவிகளை அமெரிக்கா செய்ய வேண்டும் என ஒரு சட்டம் இருக்கிறது.

No comments:

Post a Comment