பிரதமர், நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதா இல்லையா? : ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் மீண்டும் ஆலோசனை - News View

Breaking

Tuesday, October 19, 2021

பிரதமர், நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதா இல்லையா? : ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் மீண்டும் ஆலோசனை

(ஆர்.யசி)

யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா இல்லையா? தமது அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து ஆராய எதிர்வரும் சனிக்கிழமை 23 ஆம் திகதி மீண்டும் பங்காளிக் கட்சிகள் கூடி தீர்மானிக்கவுள்ளனராம்.

ஜனாதிபதியின் பதில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

யுகதனவி மின்சார உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையே கடும் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென இதற்கான காரணத்தையும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் யுகதனவி மின்சார நிலைய உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவும் தமது தரப்பு காரணிகளை முன்வைக்கவும் வேண்டும் என ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்த போதிலும், இந்த விடயங்கள் குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளிடத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பங்காளிக் கட்சிகள் இந்த பதிலை ஜனாதிபதியிடம் எதிர்பார்த்திருக்காத நிலையில் அடுத்த கட்டத்தில் என்ன செய்வது என்பது குறித்து பங்காளிக் கட்சிகள் இடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அடுத்ததாக தாம் என்ன செய்வது என்பது குறித்து ஆராயும் விதமாக எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் சகல பங்காளிக் கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில், அரசாங்கத்திற்குள் வாத பிரதிவாதங்கள், கருத்து முரண்பாடுகள், கொள்கை ரீதியிலான பிரச்சினைகள் வருவது ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் அடையாளம் என்றே நான் கருதுகின்றேன். அவ்வாறே இந்த விவகாரத்திலும் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து எம்மத்தியில் இணக்கப்பாடு இல்லை.

இதற்கு முன்னரும் அரசாங்கத்தில் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையில் அதனை எதிர்த்து நாம் செயற்பட்டோம். இப்போதும் அவ்வாறே இடம்பெற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கம் தவறான தீர்மானம் எடுக்கும் வேளையில் அதனை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை சரியான திசையில் கொண்டு நகர்த்தும் கடமை அரசாங்கத்தில் அங்கம் வகுக்கும் எமக்கு உண்டு.

ஆகவேதான் அரசாங்கத்தில் நாம் எதிர்கட்சிகள் என்ற கருத்தையும் ஏற்கனவே கூறியிருந்தேன். பங்காளிக் கட்சிகள் இந்த விடயங்கள் குறித்து மீண்டும் பேசுவோம். அதன் பின்னர் ஒரு தீர்மானம் எடுக்கப்படும். பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் பேசுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார், அவர்களுடன் பேசுவதா இல்லையா என்பதை நாம் விரைவில் தீர்மானிப்போம் என்றார்.

No comments:

Post a Comment