புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான ஆரம்ப வரைபு இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு - News View

Breaking

Tuesday, October 19, 2021

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான ஆரம்ப வரைபு இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

(ஆர்.யசி)

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான ஆரம்ப வரைபையும் கட்சிகளின் பரிந்துரைகளையும் அமைச்சரவையில் முன்வைக்க அரசாங்கம் நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகவும், எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பரிந்துரைகள் முன்வைக்கப்படமாட்டாது எனவும் ஆளுந்தரப்பின் மூலமாக தெரிய வருகின்றது.

வெகு விரைவில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணிகளை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரரும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இது குறித்து தெரிவிக்கையில், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சகல கட்சிகளின் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்னமும் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இருக்காது.

ஏனென்றால் சகல தரப்பினதும் கருத்துக்கள், பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இறுதியாக எவ்வாறான அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தரப்பினர் தீர்மானம் எடுப்பார்கள். அமைச்சரவையிலும் இது குறித்து பேசப்பட்டதாக அறிய முடிந்தது. எனவே விரைவில் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் ஜனாதிபதியை அணிமையில் சந்தித்த எல்லே குணவன்ச தேரர் இது குறித்து தெரிவிக்கையில், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாக உள்ளார்.

வெகுவிரைவில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் இடம்பெறும் எனவும், அரசாங்கத்தில் இது குறித்த கலந்துரையாடல்கள் அமைச்சரவையிலும் ஏனைய மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் மூலமாக வெகு விரைவில் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.

எனினும் அரசியல் அமைப்பில் உள்ளடக்கம் குறித்த தெளிவு இன்னமும் என்னிடத்தில் இல்லை, அது குறித்து நாம் அவதானமாக இருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இவற்றை முன்வைக்கும் வேளையில் அதன் உள்ளடக்கம் மற்றும் அவசியத்தன்மைகள் குறித்து நாம் கவனம் செலுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment