கப்ராலுக்கு எதிரான வழக்கு : மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் சார்பில் வாதம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 8, 2021

கப்ராலுக்கு எதிரான வழக்கு : மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் சார்பில் வாதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட முடிவினை செல்லுபடியற்றது என அறிவிக்கக் கோரியும் அவரைக் கைது செய்து விசாரணை செய்ய பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டளை நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் நேற்று வாதம் முன் வைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே மன்றில் இந்த வாதங்களை முன் வைத்தார்.

தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த குறித்த மனு மீதான பரிசீலனைகள் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே இந்த வாதம் முன் வைக்கப்பட்டது.

அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக ஜனாதிபதியே நியமனம் செய்ததாகவும், அந்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் வழக்கை இந்த நீதிமன்றில் விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே வாதிட்டார்.

நேற்று குறித்த மனுவானது பரிசீலனைக்கு வந்த போது, பிரதிவாதி அஜித் நிவாட் கப்ரால் சார்பில் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஆஜரானதுடன், சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, முன்னிலையானார்.

இதனையடுத்து குறித்த மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த மேன் முறையீட்டு நீதிமன்றம், மனு தொடர்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்களை அன்றைய தினத்துக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அனைத்து தரப்புக்கும் அறிவித்தது.

நேற்று மனுவானது பரிசீலனைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குனரத்ன ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய ஆளுநர் பதவிக்கு நியமிப்பதை தடுக்க கோரி கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிபேராணை மனுவொன்றினை தாக்கல் செய்தார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளை மையப்படுத்தி அஜித் நிவார்ட் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், அஜித் நிவார்ட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம். ஜே.வை, பி பெர்னான்டோ ஆகியோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment