இரு நாடுகளும் பொதுவான பொருளாதார, பாதுகாப்புச் சவால்களுக்கு கூட்டாக முகங்கொடுக்க வேண்டியது அவசியம் - இந்திய வெளியுறவுச் செயலாளர் - News View

Breaking

Monday, October 4, 2021

இரு நாடுகளும் பொதுவான பொருளாதார, பாதுகாப்புச் சவால்களுக்கு கூட்டாக முகங்கொடுக்க வேண்டியது அவசியம் - இந்திய வெளியுறவுச் செயலாளர்

நா.தனுஜா

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இந்திய - இலங்கை நாடுகளின் பொருளாதாரங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து மீட்சி பெற வேண்டுமெனில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ரீதியிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து பணியாற்றுவதுடன், இரு நாடுகளுக்கும் பொதுவான பொருளாதார மற்றும் பாதுகாப்புச் சவால்களுக்கு கூட்டாக முகங்கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிக்கும் இந்திய நிதியுதவியுடனான அபிவிருத்தி செயற்திட்டங்களான தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலை வசதி, பொலனறுவை மும்மொழிப்பாடசாலை, பல்லேகல கண்டியன் நடனப் பாடசாலை ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளையும் எதிர்வரும் சிலமாதகாலத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்திய வெளியுறவுச் செயலாளர் என்ற வகையில் நான் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவென்ற போதிலும், கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வருகை தரும் நல்வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன்.

இத்தனை வருட காலப் பகுதியிலும் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் செயற்திறனான மாற்றம் ஏற்பட்டிருப்பதனை அவதானிக்கின்றேன்.

நேற்றையதினம் கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிக்கைக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுமாத்திரமன்றி திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்ததுடன் அங்கு இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையத்தையும் பார்வையிட்டேன். இவை இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட பாரம்பரிய கலாசாரத்தையும் வலுவான அபிவிருத்திசார் ஒத்துழைப்பையும் வெளிக்காட்டுகின்றன.

இந்தியா - இலங்கைக்கு இடையிலான இரு தரப்புத் தொடர்புகள் பல தரப்பட்ட கோணங்களிலும் முன்னேற்றம் கண்டு வருவதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த 2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயம், கடந்த 2020 பெப்ரவரியில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் உள்ளிட்ட உயர்மட்ட விஜயங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு புத்துணர்ச்சியளித்துள்ளன.

அதேபோன்று பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் ஆளணி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துதல் தொடர்பில் ஆராயும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியினதும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினதும் பங்குபற்றுதலுடன் கடந்த 2020 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இணையவழியிலான மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகவும் கடினமான சூழ்நிலைகளின்போது முதலாவதாக உதவிகளை வழங்குகின்ற நாடாக இந்தியா இருந்து வருகின்றது.

அந்த வகையில் அண்மையில் இலங்கையின் கடற்பரப்பில் கப்பலொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கடல் மாசடைவின்போது இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக உதவிகளை வழங்கியதையிட்டு இந்தியா மகிழ்ச்சியடைகின்றது.

அத்தோடு கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதில் இலங்கைக்கு உதவும் வகையில் ஒட்சிசன் கொள்கலன்களை விநியோகிப்பதற்கு (கடந்த ஆகஸ்ட் மாதம்) அவசியமான ஒத்துழைப்புக்கள் இந்தியக் கடற்படையினரால் வழங்கப்பட்டிருந்தன.

மேலும் முக்கியமானதும் அவசர மருத்துவ தேவைகளின்போதும் பயணிப்பதற்காக இலங்கைக்கென இந்தியா அதன் வான் பரப்பைத் திறந்த நிலையில் வைத்திருந்தது.

இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் ஓரளவிற்கு முன்னேற்றமடைந்து வருகின்றது. இது யாழ்ப்பாணம் - சென்னைக்கு இடையிலான விமான சேவை, காரைக்கால் - காங்கேசன்துறை மற்றும் தனுஷ்கோடி - தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடையிலான படகுசேவை, குஷிநகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் பௌத்த மத ரீதியான பயணங்கள் உள்ளடங்கலாக இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்பாக அமையக்கூடும்.

அதேவேளை வவுனியா மாவட்டத்தில் 'மாதிரி வீடமைப்புக் கிராமம்' செயற்திட்டம், யாழ். வடமராட்சியில் பாடசாலை நிர்மாணம், புஸ்ஸல்லாவவில் சரஸ்வதி மத்திய கல்லூரிக் கட்டட நிர்மாணம் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஊடாக மக்களை மையப்படுத்திய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.

அத்தோடு இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களில் இலங்கையின் மூலப்பொருட்கள் மற்றும் மனிதவளம் என்பன பயன்படுத்தப்பட்டமையை குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தம்புள்ளை குளிரூட்டல் வசதி, பொலனறுவை மும்மொழிப்பாடசாலை, பல்லேகல கண்டியன் நடனப் பாடசாலை ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளை இருத ரப்பினரும் இணைந்து எதிர்வரும் சில மாதகாலத்திற்குள் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அத்தோடு இலங்கையிலுள்ள 'இராமாயண காவியத்துடன் தொடர்புடைய' தளங்களை சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகைக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் இந்தியா தயாராக இருக்கின்றது.

No comments:

Post a Comment