அணியின் தேவைக்காக விளையாடத் தயார் : தினேஷ் சந்திமால் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

அணியின் தேவைக்காக விளையாடத் தயார் : தினேஷ் சந்திமால்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அணியின் தேவைக்காக எந்தவொரு துடுப்பாட்ட இலக்கத்திலும் துடுப்பெடுத்தாடவும், களத்தடுப்பில் ஈடுபடவும் தயாராகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் சூம் தொழில்நுட்ப வசதியின் ஊடாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தினேஷ் சந்திமால் மேலும் கூறுகையில், "எமது அணியின் பயிற்றுநர் மற்றும் தெரிவுக்குழு ஆகியன என்னை ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் விக்கெட் காப்பாளராகவும் களமிறக்கவே திட்டமிட்டுள்ளது.

வழமையாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பெடுத்தாடி வந்த அவிஷ்க பெர்னான்டோவை நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறக்கவே திட்டமிட்டுள்ளோம்.

அவரும் ஓமான் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியின்போது நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அசத்தியிருந்தார்.

குசல் ஜனித் பெரேரா உபாதையிலிருந்து குணம் பெற்றுள்ளார். அவர் அணிக்குள் வந்தால் பெரும் பலமாக இருக்கும். எவ்வாறாயினும், நானும் பெத்தும் நிஸ்ஸங்கவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்குவதே எமது திட்டமாக உள்ளது.

இந்நிலையில், அணியின் தேவைகருதி என்னை எந்த இடத்தில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தாலும் அந்த இடத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கும், களத்தடுப்பில் ஈடுபடுவதற்கும் தயாராக உள்ளேன்" என்றார்.

இம்முறை உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பலர் முதல் முறையாக விளையாடவுள்ளனர். ஆகையால், புது வீரர்கள் இதனை எவ்வாறு அணுகவுள்ளனர் என கேட்டதற்கு பதிலளித்த சந்திமால்,

"எமது அணியில் உள்ள வீரர்கள் அதிக திறமை படைத்தவர்கள். எமது வீரர்கள் எந்தவொரு சவால்களையும், எந்தவொரு சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்.

அதற்கான சிறந்த மனோ தைரியம் மற்றும் நம்பிக்கையுடன் எமது வீரர்கள் உள்ளனர். தகுதி காண் சுற்றில் எமது எதிரணிகளான அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகள் தொடர்பில் போதியளவு ஆராய்ந்துள்ளோம்.

அவர்களின் துடுப்பாட்ட வீரர்களுக்கு எவ்வாறு பந்து வீசுவது, அவர்களின் பந்து வீச்சாளர்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தினோம்.

ஆகவே, நாம் எமது திட்டத்தை சிறப்பாக செயற்படுத்துவதுடன், அன்றையதினம் சிறப்பாக செயல்படும்போது நல்ல முடிவுகளை பெறமுடியும்.

இங்குள்ள காலநிலையை பொருத்தமட்டில் மிகவும் வெப்பமாக காணப்படுகிறது. எனினும், இங்குள்ள மைதான ஆடுகளங்கள் இலங்கை மைதான ஆடுகளங்களுக்கு ஒத்ததாகவே இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

No comments:

Post a Comment